போலீஸ் வாகனம் மோதி வங்கி அதிகாரி சாவு
பண்ட்வால் அருகே போலீஸ் வாகனம் மோதி வங்கி அதிகாரி பரிதாபமாக இறந்தார்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா பனாஜே அருகே உள்ள கோட்டே கிராமத்தை சேர்ந்தவர் லஷ்மண நாயக்(வயது 47). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். லஷ்மண நாயக் ஆர்லபதவில் உள்ள தனியார் வங்கியில் தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் லஷ்மண நாயக் வழக்கம் போல் மோட்டார் சைக்கிளில் வங்கிக்கு வேலைக்கு சென்றார். அவர் மைசூரு தேசிய நெடுஞ்சாலை சம்பியா அருகே சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த போலீஸ் வாகனம் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட லஷ்மண நாயக் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.