வெளிநாட்டு வாலிபர் மீது சரமாரி தாக்குதல்?
வெளிநாட்டு வாலிபர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராஜனகுண்டே:-
பெங்களூரு ராஜனகுண்டே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சர்க்கிள் பகுதியில் வாலிபர் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்மகும்பல் அவரை வழிமறித்தது. பின்னர், திடீரென அவர் மீது சரமாரியாக அந்த கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் வாலிபர் படுகாயம் அடைந்து சரிந்து விழுந்தார். அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டனர். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதையடுத்து அந்த வாலிபரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து ராஜனகுண்டே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து விசாரணை நடத்தினர். தாக்குதலுக்கு ஆளானவர் வெளிநாட்டை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.