அறிவியல் ஆராய்ச்சியில் கர்நாடகம் முன்னேறி வருகிறது; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
அறிவியல் ஆராய்ச்சியில் கர்நாடகம் முன்னேறி வருகிறது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களூரு:
அறிவியல் ஆராய்ச்சியில் கர்நாடகம் முன்னேறி வருகிறது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களூரு எச்.ஏ.எல். நிறுவனத்தில் கிரையோஜெனிக் என்ஜின் உற்பத்தி மைய தொடக்க விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசுகையில் கூறியதாவது:-
முடிவே இல்லை
கர்நாடக அரசு விமானவியல், ஆராய்ச்சி-வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை வகுத்துள்ளன. ஆராய்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய கர்நாடக அரசு தயாராக உள்ளது. அறிவியல்-ஆராய்ச்சியில் கர்நாடகம் முன்னேறி வருகிறது. புதிய இந்தியாவுக்காக புதிய கர்நாடகம் என்ற முழக்கத்தை முன்வைத்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
அறிவியல் தன்னை தொடர்ந்து விஸ்தரித்து கொள்ளும் தகுதியை பெற்றுள்ளது. அதற்கு முடிவே இல்லை. மனித சமூகத்தின் நலனுக்காக அறிவியல் ஆராய்ச்சி இருக்க வேண்டும். விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா தொடக்கத்தில் இருந்தே தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆரியபட்டா அதிகளவில் அறிவியல் சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுட்டார். அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியா பிற நாடுகளுக்கு ஒன்றும் குறைந்தது அல்ல. நூற்றுக்கணக்கான செயற்கைகோள்களை ஏவியுள்ளோம். வணிக செயற்கைகோள்களையும் விண்ணில் செலுத்துகிறோம்.
தொழில்நுட்பம்
கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை நாமும் உருவாக்கி இருப்பது பெரிய சாதனை ஆகும். இதன் மூலம் கிரையோஜெனிக் என்ஜின் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. இஸ்ரோ மற்றும் எச்.ஏ.எல். நிறுவனங்களின் தலைமையகம் பெங்களூருவில் அமைந்துள்ளது. பெங்களூரு விண்வெளி நகரம் ஆகும். நாட்டின் மொத்த விமானவியல் உதிரிபாகங்கள் ஏற்றுமதியில் கர்நாடகத்தின் பங்கு 65 சதவீதம் ஆகும். 60 சதவீத ராணுவ தளவாடங்கள் இங்கு தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.