முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வருகிற 12-ந்தேதி சாம்ராஜ்நகர் வருகை
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வருகிற 12-ந்தேதி சாம்ராஜ்நகருக்கு வருகிறார். அங்கு ரூ.1,000 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார் என்று மந்திரி சோமண்ணா தெரிவித்துள்ளார்.
கொள்ளேகால்:
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வருகிற 12-ந்தேதி சாம்ராஜ்நகருக்கு வருகிறார். அங்கு ரூ.1,000 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார் என்று மந்திரி சோமண்ணா தெரிவித்துள்ளார்.
மந்திரி சோமண்ணா ஆய்வு
சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு மந்திரி சோமண்ணா நேற்று சாம்ராஜ்நகருக்கு வந்தார். சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா மாதேஸ்வரன் மலை பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற மலை மாதேஸ்வரா கோவிலில் கட்டப்பட்டு வரும் 108 அடி உயர மாதேஸ்வரா சிலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், சிலை அமைக்கும் பணி மந்தகதியில் நடக்கிறது என்றும், ஜனவரி மாதம் 18-ந்தேதிக்குள் சிலை பணிகளை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
பின்னர் மலை மாதேஸ்வரா கோவிலில் வளர்ச்சி பணிகளை அவர் பார்வையிட்டார். இதையடுத்து நாகமலை பவனில் மந்திரி சோமண்ணா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், மலை மாதேஸ்வரா வனப்பகுதியை புலிகள் பாதுகாப்பு சரணாலயமாக மாற்றக்கூடாது என்பது எனது கருத்து. சரணாலயம் வந்தால் அந்தப்பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றார்.
ரூ.1000 கோடியில் வளர்ச்சி பணிகள்
இதையடுத்து ஹனூர் பகுதிக்கு சென்ற அவர், 98 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் ரூ.192 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து மந்திரி சோமண்ணா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வருகிற 12-ந்தேதி சாம்ராஜ்நகருக்கு வருகிறார். மலை மாதேஸ்வரா கோவிலுக்கு வந்து வளர்ச்சி பணிகளை பார்வையிட உள்ளார். சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ரூ.1,000 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை அவர் தொடங்கி வைக்க உள்ளார்.