பெண்கள் தீவிர பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
பெண்கள் தீவிரமான பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
பெண்கள் தீவிரமான பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
மகளிரின் திறமை
கர்நாடகத்தில் 2,500 மகளிர் சுயஉதவி குழுக்கள் மற்றும் ஒரு தனியார் மின் வணிக நிறுவனம் இடையே வணிக புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில் பெங்களூருவில் நேற்று போடப்பட்டது. மகளிர் சுயஉதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் அந்த மின் வணிக நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படும். இந்த நிகழ்ச்சியில் பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
கர்நாடக அரசு மகளிர் திறன் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டம் மூலம் கர்நாடகத்தில் உள்ள மகளிரின் திறமை உலகத்திற்கே தெரியவரும். இந்த திட்டம் "என்டு டூ என்டு" முறையில் செயல்படுத்தப்படுகிறது. கிராமப்புற பெண்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்தும் நோக்கத்தில் மாநில அரசு மேற்கொண்டுள்ள இந்த திட்டத்தில் கனரா வங்கி மற்றும் தனியார் மின் வணிக நிறுவனம் கைகோர்த்துள்ளது வரவேற்கத்தக்கது.
பொருளாதார நடவடிக்கைகள்
திறன் மேம்பாடு, தொழில்முனைவுத்துறை மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு சுயதொழில் செய்ய உரிய பயிற்சி அளிக்கிறது. இந்த திட்டங்களை மேலும் விரிவுப்படுத்தி இதை நுண்ணிய அளவில் கொண்டு செல்ல வேண்டியது அவசியம். பெண்கள் பொருளாதார நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும். பொருளாதாரம் என்றால் பணம் அல்ல, அது மக்களின் பொருளாதார நடவடிக்கைகள். பெண்களிடம் அபாரமான திறமை உள்ளது. பெண் சக்தியில் எனக்கு நம்பிக்கை உள்ளது. அதற்காகவே சாமர்த்தியம் (திறன்) என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். சமுதாயத்தில் 50 சதவீதம் இருக்கும் பெண்கள் தங்களை பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். அதற்காகவே மகளிர் சுயஉதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் மின் வணிகத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக உலக அளவில் அவர்களுக்கு சந்தை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது. இதற்கு தேவையான உதவிகளை மாநில அரசு செய்யும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
இதில் உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மந்திரி அஸ்வத் நாராயண், போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, போக்குவரத்து மந்திரி ஸ்ரீராமுலு, தலைமை செயலாளர் வந்திதா சர்மா உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.