மயான தொழிலாளிகளுடன் சிற்றுண்டி சாப்பிட்ட முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
பெங்களூருவில் மயான தொழிலாளர்களுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிற்றுண்டி சாப்பிட்டார்.
பெங்களூரு:
பெங்களூருவில் மயான தொழிலாளர்களுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிற்றுண்டி சாப்பிட்டார்.
மயான தொழிலாளர்கள்
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூரு ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தனது பங்களாவில், மயானத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுடன் காலை சிற்றுண்டி சாப்பிட்டார். அவர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் ஒரு முறை மயானத்தில் பணியாற்றும் தொழிலாளி ஒருவரை சந்தித்து அவரின் நிலையை அறிந்து கொண்டேன். அப்போதே, மயான தொழிலாளர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தேன். அதன் அடிப்படையில் மயானத்தில் பணியாற்றும் 130 தொழிலாளர்களின் பணியை நிரந்தரம் செய்தேன். மாநிலத்தில் இன்னும் 300 தொழிலாளர்களின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டியுள்ளது. அவர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
யாரும் கவனிக்கவில்லை
இதுவரை மயான தொழிலாளர்களை யாரும் கவனிக்கவில்லை. இந்த சமுதாயத்தில் கடைகோடியில் உள்ள மனிதர்களின் கஷ்டங்களையும் எங்கள் அரசு கேட்டு நிவர்த்தி செய்கிறது. மக்களுக்கு ஆதரவான அரசு இருந்தால் மட்டுமே இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளும். கர்நாடகத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய முடிவு செய்துள்ளோம்.
அவர்களில் முதல்கட்டமாக 11 ஆயிரம் பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். அடுத்த 2 கட்டத்தில் மீதம் உள்ளவர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். இத்தகைய முடிவுகள் எடுக்கும்போது, ஆதரவு, எதிர்ப்பு கருத்துகள் வருகின்றன. நமது நகரங்களில் அசுத்தங்களை அகற்றி தூய்மையாக்கும் பணியை அவர்கள் தான் செய்கிறார்கள். நமது முடிவுகள் மனிதநேயத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
தூய்மை பணியாளர்கள்
துப்புரவு தொழிலாளர்களை தூய்மை பணியாளர்கள் என்று அழைக்க வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு மரியாதை வழங்க வேண்டும். பெங்களூருவில் மின் மயானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். நீங்கள் எனக்கு ஹரிச்சந்திரன் சிலையை நினைவு பரிசாக வழங்கியுள்ளீர்கள். இதுவரை எனக்கு யாரும் இந்த சிலையை பரிசாக வழங்கவில்லை. இந்த சிலையை நான் தினமும் பூஜை செய்யும் இடத்தில் வைத்து கொள்வேன்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.