டெல்லியில் அமித்ஷாவுடன், பசவராஜ் பொம்மை ஆலோசனை


டெல்லியில் அமித்ஷாவுடன், பசவராஜ் பொம்மை ஆலோசனை
x

டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார். சட்டசபை தேர்தல், மந்திரிசபை விரிவாக்கம் குறித்து அமித்ஷாவுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார். சட்டசபை தேர்தல், மந்திரிசபை விரிவாக்கம் குறித்து அமித்ஷாவுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதல் மந்திரிக்கு நெருக்கடி

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. மந்திரிசபையில் இன்னும் 6 இடங்கள் காலியாக உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே இருப்பதால் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் பா.ஜனதாவின் மூத்த தலைவர் ஈசுவரப்பாவும், ரமேஷ் ஜார்கிகோளியும் தங்களுக்கு மீண்டும் மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக ஈசுவரப்பா பா.ஜனதாவில் இருந்து விலகும் முடிவையும் எடுத்திருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, ஈசுவரப்பாவை பசவராஜ் பொம்மை சமாதானப்படுத்தி இருந்தார். அத்துடன் டெல்லிக்கு சென்று பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசுவதாகவும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்து இருந்தார்.

அமித்ஷாவுடன் ஆலோசனை

இந்த நிலையில், பெலகாவியில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சந்தர்ப்பத்தில் நேற்று மாலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோளும் சென்றிருந்தார். பின்னர் நேற்று இரவு டெல்லியில் உள்ள மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் வீட்டுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சென்றார். பின்னர் அவர், அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் உடன் இருந்தார்.

2 மணி நேரத்துக்கும் மேலாக அமித்ஷா, ஜே.பி.நட்டாவுடன், பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது மந்திரிசபை விரிவாக்கம் குறித்தும், ஈசுவரப்பா மற்றும் ரமேஷ் ஜார்கிகோளிக்கு மீண்டும் மந்திரி பதவி வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் மந்திரிசபையை மாற்றியமைப்பது குறித்தும் 2 பேரும் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சட்டசபை தேர்தல் குறித்து...

கர்நாடக சட்டசபைக்கு இன்னும் 5 மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால், சட்டசபை தேர்தலை எதிர் கொள்வது குறித்து அமித்ஷாவுடன் பசவராஜ் பொம்மை பேசினார். அப்போது மாநிலத்தில் முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி புதிய கட்சி தொடங்கி இருப்பது குறித்தும் அமித்ஷாவிடம் பசவராஜ் பொம்மை எடுத்துக் கூறினார்.

பின்னர் அமித்ஷாவின் வீட்டில் இருந்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை புறப்பட்டு வந்திருந்தார். நேற்று இரவு டெல்லியில் தங்கிய அவர் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை டெல்லியில் இருந்து பெலகாவிக்கு புறப்பட்டு வர உள்ளார்.


Next Story