பட்ஜெட் திட்டங்களை காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும்; கலெக்டர்களுக்கு பசவராஜ் பொம்மை உத்தரவு


பட்ஜெட் திட்டங்களை காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும்; கலெக்டர்களுக்கு பசவராஜ் பொம்மை உத்தரவு
x

பெங்களூரு விதானசவுதாவில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில் பேசிய முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை, மக்கள் பிரச்சினைகளை தீர்க்க உரிய நேரத்தில் முடிவு எடுங்கள் என்றும், பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை காலக்கெடுவுக்குள் முடிக்கவும் உத்தரவிட்டார்.

பெங்களூரு:

பெங்களூரு விதானசவுதாவில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில் பேசிய முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை, மக்கள் பிரச்சினைகளை தீர்க்க உரிய நேரத்தில் முடிவு எடுங்கள் என்றும், பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை காலக்கெடுவுக்குள் முடிக்கவும் உத்தரவிட்டார்.

கலெக்டர்கள் மாநாடு

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் மாவட்ட கலெக்டர்களின் மாநாடு நேற்று நடைபெற்றது. பெங்களூரு விதான சவுதாவில் நடந்த இந்த மாநாட்டில் மந்திரிகள் மற்றும் மாவட்டங்களின் கலெக்டர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு மாவட்ட கலெக்டராக பணியாற்ற கிடைக்கும் வாய்ப்பு அற்புதமானது. நீங்கள் பணியாற்றும் மாவட்டங்களில் எந்த மாதிரி உங்களின் அடையாளத்தை விட்டுவிட்டு செல்கிறீர்கள் என்பது தான் முக்கியம். இப்போது உள்ள அதிகாரிகளில் பலர் கலெக்டர் பணியை தங்களின் அதிகாரத்தின் ஒரு பகுதி என்று மட்டுமே பார்க்கிறார்கள்.

மக்கள் பிரச்சினைகள்

இந்த பணியின் பொறுப்பு மற்றும் நிர்வாகத்தின் தாக்கத்தை அவர்கள் கவனத்தில் எடுத்து கொள்வது இல்லை. ஆனால் ஆட்சி செய்பவர்கள் வேறு, நிர்வாகம் செய்கிறவர்கள் வேறு. இதை நீங்கள் மனதில் வைத்து பணியாற்ற வேண்டும்.

நீங்கள் நிர்வாகத்தின் ஒரு பாகமாக உள்ளீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நிர்வாக ரீதியாக மிக முக்கியம். எந்த பணியாக இருந்தாலும் அதை செய்யாமல் தவிர்த்தால் அதற்கு 101 காரணங்களை கூற முடியும்.

காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும்

ஒரு நல்ல பணியை செய்ய வேண்டும் என்றால் ஒரே காரணம் போதும். அதனால் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்தில் உரிய நேரத்தில் முடிவுகளை எடுக்க வேண்டும். பிரச்சினைகள் இருந்தால் உடனே உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி ஆலோசனை பெறுங்கள்.

நீங்கள் உங்களின் ஆலோசனைகளை வெளிப்படையாக கூற வேண்டும். அதன் அடிப்படையில் அரசு உரிய முடிவுகளை எடுக்க முடியும். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உரிய காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த மாநாட்டில் சிறப்பான நிர்வாகம் என்ற புத்தகத்தை முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை வெளியிட்டார்.

இதில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், சட்டத்துறை மந்திரி மாதுசாமி, மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார், பொதுப்பணித்துறை மந்திரி சி.சி.பட்டீல், வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா, போக்குவரத்து மந்திரி ஸ்ரீராமுலு, கலால்துறை மந்திரி கோபாலய்யா, தலைமை செயலாளர் வந்திதா சர்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story