பட்ஜெட் தயாரிப்பு பணிகள் குறித்து 5 துறை அதிகாரிகளுடன் பசவராஜ் பொம்மை இன்று ஆலோசனை
பட்ஜெட் தயாரிப்பு பணிகள் குறித்து 5 துறைகளின் அதிகாரிகளுடன் இன்று (திங்கட்கிழமை) முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்த உள்ளார்.
பெங்களூரு:
17-ந் தேதி பட்ஜெட் தாக்கல்
கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது ஆட்சி காலம் இன்னும் 4 மாதங்களில் நிறைவு பெற உள்ளது. இந்த நிலையில், 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்துவது, கவர்னர் உரை குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மந்திரிசபை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது பிப்ரவரி 10-ந் தேதியில் இருந்து கூட்டத்தொடரை நடத்துவது என்றும், பிப்ரவரி 17-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான தேதி முடிவு செய்யப்பட்டு இருப்பதால், நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பட்ஜெட் தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். நேற்று முன்தினம் பட்ஜெட் தயாரிப்பு குறித்து 10 துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
5 துறைகளின் அதிகாரிகளுடன்...
ஆனால் சுகாதாரத்துறை, உயர்கல்வித்துறை, பள்ளி கல்வித்துறை உள்பட 5 துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் மட்டுமே முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தி இருந்தார். போதிய நேரம் இல்லாத காரணத்தால், மற்ற 5 துறைகளின் அதிகாரிகளுடன் அவரால் ஆலோசிக்க முடியாமல் போனது. இதையடுத்து, பட்ஜெட் தயாரிப்பு குறித்து இன்று (திங்கட்கிழமை) 5 முக்கிய துறைகளின் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்த உள்ளார்.
பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கைகள், முக்கிய துறைகளில் நிறைவேற்றப்படாமல் இருக்கும் திட்டங்கள், புதிய திட்டங்களை அறிவிப்பது உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முடிவு செய்ய உள்ளார். சட்டசபை தேர்தலையொட்டி தாக்கல் செய்யப்படுவதால், பட்ஜெட்டில் மக்களை கவரும் திட்டங்களை அறிவிக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.