அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்காததால் சொந்த செலவில் சாலை அமைத்த கிராம மக்கள்
கலசா அருகே, அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் சொந்த செலவில் சாலை அமைத்துள்ளனர்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்டம் கலசா தாலுகா குதிரேமுகா அருகே ஓசூர் கிராமத்தில் சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால், அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. மேலும், அந்த கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி இன்றி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.
இந்த நிலையில் அந்தப்பகுதி மக்கள் தங்களின் சொந்த செலவில் சாலை அமைக்க முடிவு ெசய்தனர். பின்னர் அவர்கள் கிராமத்தில் பணம் வசூல் செய்து, அந்த பணத்தில் குண்டும், குழியுமாக இருந்த சாலையை சரி செய்தனர்.
இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் கூறுகையில், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனாலும், எங்கள் பகுதியில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு பலமுறை புகார் அளித்தும், எந்த பலனும் இல்லை. இதனால் நாங்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம்.
அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் யாரும் சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நாங்களே எங்களது சொந்த செலவில் சாலையை சீரமைத்துள்ளோம் என்றனர்.