பா.ஜனதா கட்சி வேகமாக வளர்ந்து வருவதால் ராமநகரில் குமாரசாமிக்கு தோல்வி பயம் வந்து விட்டது- சி.பி.யோகேஷ்வர் பேட்டி
பா.ஜனதா கட்சி வேகமாக வளர்ந்து வருவதால் ராமநகரில் குமாரசாமிக்கு தோல்வி பயம் வந்து விட்டது என்று சி.பி.யோகேஷ்வர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: ராமநகரில் முன்னாள் மந்திரி சி.பி.யோகேஷ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
ராமநகர் மாவட்டத்தில் பா.ஜனதா கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. ஜனதாதளம்(எஸ்) கட்சி ராமநகரில் மக்கள் செல்வாக்கை இழந்து வருகிறது. இதன் காரணமாக குமாரசாமிக்கு தோல்வி பயம் வந்து விட்டது. பா.ஜனதா மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருகிற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கிறார். குமாரசாமி தொகுதி மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. தொகுதி மக்களுக்காக எந்த நேரமும் நான் உழைத்து வருகிறேன். இதற்கு முன்பு ராமநகரில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் இடையே தான் போட்டி இருந்தது. தற்போது பா.ஜனதாவும் இணைந்துள்ளது. பழைய மைசூரு பகுதிகளில் பா.ஜனதாவின் அபரிமிதமான வளர்ச்சியால் குமாரசாமிக்கு தோல்வி பயம் வந்து விட்டது. பழைய மைசூரு பகுதிகளில் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் பலம் குறைந்து விட்டது. ராமநகர் மாவட்டம் உள்பட பழைய மைசூரு பகுதிகளில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.