அமேசான் மேலாளர் கொலையின் பின்னணியில் மாயா கேங்.. 2 பேர் கைது
குறுகலான பாதையில் யார் வழி விடுவது? என்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் எதிரே வந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
புதுடெல்லி:
டெல்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அமேசான் மேலாளர் ஹர்பிரீத் கில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சாலையில் சென்றபோது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது.
இரவு 10.30 மணியளவில் ஹர்பிரீத் மற்றும் அவரது உறவினர் கோவிந்த் (வயது 32) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் குறுகலான பாதையை கடந்தபோது எதிரே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வந்தன. அப்போது யார் வழி விடுவது? என்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் எதிரே வந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் ஹர்பிரீத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோவிந்த் பலத்த காயமடைந்துள்ளார்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மாயா (வயது 18) மற்றும் அவரது கூட்டாளி பிலால் கனி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 3 பேரை தேடி வருகின்றனர்.
விசாரணையில், இந்த கொலையில் ஈடுபட்டது மாயா கேங் என்பதும், அந்த கும்பலுக்கு மாயா தலைவன் என்பதும் தெரியவந்துள்ளது. மாயா 4 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளான்.
மாயாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை போலீசார் ஆய்வு செய்தபோது அதிர்ச்சி அடைந்தனர். இன்ஸ்டாகிராம் சுயவிவரத்தில், "நான் மோசமானவன், கல்லறைத்தோட்டம் என் முகவரி, இது என் வயது, ஆனால் நான் சாக விரும்புகிறேன்" என பதிவு செய்திருந்தான்.
ஹைலைட்டை கிளிக் செய்தபோது மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. "சிறை" என்று தலைப்பிடப்பட்ட ஒரு ரீல்சில் பல இளைஞர்களை கம்பிகளுக்குப் பின்னால் இருப்பதும், மாயா துப்பாக்கிகளுடன் போஸ் கொடுத்து சுடுவதையும் காட்டுகிறது. ஒரு படத்திற்கு "மாயா கும்பல்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அதில் 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இருந்தனர்.
எனவே, இது தற்செயலாக இணைந்த இளைஞர்களின் குழு அல்ல, மாறாக வடகிழக்கு டெல்லியை பயமுறுத்திய ஒரு கும்பல் என காவல்துறை தெரிவித்துள்ளது.