பெங்களூரு மாநகராட்சி வார்டுகள் எண்ணிக்கையை 250 ஆக உயர்த்த திட்டம்; தேர்தல் மேலும் தள்ளிப்போகும்
பெங்களூரு மாநகராட்சியில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கையை 250 ஆக உயர்த்த காங்கிரஸ் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மாநகராட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகும் நிலை உருவாகி உள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு மாநகராட்சியில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கையை 250 ஆக உயர்த்த காங்கிரஸ் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மாநகராட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகும் நிலை உருவாகி உள்ளது.
டி.கே.சிவக்குமார் வியூகம்
பெங்களூரு மாநகராட்சியில் 198 வார்டுகள் இருந்தன. மாநகராட்சி கவுன்சில் பதவி காலம் கடந்த 2020-ம் ஆண்டு நிறைவடைந்தது. அதன் பிறகு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தாததால் நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டார். பின்னர் பா.ஜனதா ஆட்சியில் வார்டு மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வார்டுகளின் எண்ணிக்கை 243 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் தேர்தல் நடத்தப்படவில்லை. சட்டசபை தேர்தல் வந்ததை அடுத்து மாநகராட்சி தேர்தல் நடைபெறவில்லை.
இந்த நிலையில் கர்நாடகத்தில் புதிதாக அமைந்துள்ள காங்கிரஸ் அரசு, பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த தயாராகி வருகிறது. 28 தொகுதிகளை கொண்ட பெங்களூருவில் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ் 12 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பெங்களூருவை பொறுத்தவரையில் பா.ஜனதா பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது. அதனால் மாநகராட்சி தேர்தலில் அக்கட்சியை தோற்கடிக்க துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் வியூகம் வகுத்து வருகிறார்.
250 ஆக உயா்த்த திட்டம்
இதற்கிடையே வார்டுகளின் எண்ணிக்கையை 243-ல் இருந்து 250 ஆக உயர்த்துவது குறித்து காங்கிரஸ் அரசு திட்டமிட்டு வருகிறது. மாநகராட்சி தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை வழங்க மந்திரி ராமலிங்கரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஒரு குழுவை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை வார்டுகளின் எண்ணிக்கையை அதிகரித்தால், மாநகராட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.