ரோகித் வெமுலாவின் தாயார் ராகுல் காந்தியுடன் பாதயாத்திரை..!
சாதி பாகுபாடுக்கு எதிராக தற்கொலை செய்து கொண்ட தலித் மாணவர் ரோகித் வெமுலாவின் தாயார், ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கலந்து கொண்டார்.
ஐதராபாத்,
ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பில் படித்து வந்த 26 வயதான தலித் மாணவர் ரோகித் வெமுலா, 2016-ம் ஆண்டு, ஜனவரி 17-ந் தேதி தற்கொலை செய்து கொண்டார். நாட்டின் உயர் கல்வி நிறுவனங்களில் நடக்கிற சாதி பாகுபாடுகள் குறித்த விவாதத்தை அவரது தற்கொலை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. மாணவர்கள் பெருமளவில் போராட்டம் நடத்தினர்.
அதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் கலந்து கொண்டது நினைவுகூரத்தக்கது.
இந்த ரோகித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா, தெலுங்கானா மாநிலத்தில் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை நடத்தி வருகிற ராகுல் காந்தியை நேற்று சந்தித்தார். அவர் மேற்கொண்டு வருகிற இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு தனது ஆதரவை தெரிவித்துக்கொண்டார்.
சிறிது நேரம் ராகுல் காந்தியுடன் அவர் பாதயாத்திரையில் கலந்து கொண்டார்.
ராகுல் டுவிட்டரில் பதிவு
இதையொட்டி ராகுல் காந்தி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அந்த பதிவில் அவர், "சமூக பாகுபாடு மற்றும் அநீதிக்கு எதிரான எனது போராட்டத்தின் ஒரு சின்னமாக ரோகித் வெமுலா இருக்கிறார். அவரது தாயாரை சந்தித்தேன். இதன் மூலம் பயணத்தின் இலக்கை நோக்கிய படிகள், புதிய தைரியத்தைப் பெற்றன. அதே போல் மனதுக்கு அமைதி கிடைத்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று ராதிகா வெமுலாவும் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில், "இந்திய ஒற்றுமை யாத்திரையில் ஒன்றுபட்டு நிற்க ஆதரவு தெரிவித்தேன். ராகுல் காந்தியுடன் நடந்தேன். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தாக்குதலில் இருந்து அரசியல் சாசனத்தை காக்குமாறு அழைப்பு விடுத்தேன். ரோகித் வெமுலாவுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்" என குறிப்பிட்டுள்ளார்.