தேர்தல் நேரத்தில் விவசாயிகள் பெயரில் நடக்கும் அரசியல் சூழ்ச்சிகள் - பாரதிய கிசான் சங்கம் குற்றச்சாட்டு


தேர்தல் நேரத்தில் விவசாயிகள் பெயரில் நடக்கும் அரசியல் சூழ்ச்சிகள் - பாரதிய கிசான் சங்கம் குற்றச்சாட்டு
x

விவசாயிகள் போராட்டம் என்பது தேர்தல் நேரத்தில் விவசாயிகள் பெயரில் நடக்கும் அரசியல் சூழ்ச்சிகள் என பாரதிய கிசான் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

டெல்லி,

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்க வேண்டும், விவசாய கடனை தள்ளுபடி செய்யவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் என்பது தேர்தல் நேரத்தில் விவசாயிகள் பெயரில் நடக்கும் அரசியல் சூழ்ச்சிகள் என ஆர்.எஸ்.எஸ். ஆதரவு விவசாய அமைப்பான பாரதிய கிசான் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக பாரதிய கிசான் சங்க (பி.கே.எஸ்.) பொதுச்செயலாளர் மோகினி மோகன் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையைப் பெற வேண்டும், ஆனால் தேர்தலைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் பெயரில் நடத்தப்படும் அரசியல் சூழ்ச்சிகள் நிறுத்தப்பட வேண்டும்.

தேர்தல்கள் வரும் நேரங்களில் அரசியல் நோக்கத்துடன் விவசாயிகளின் பெயரில் போராட்டங்கள் நடத்தப்படும்போது, வன்முறை, குழப்பமான சூழல் மற்றும் தேசிய சொத்துகளுக்கு சேதம் ஏற்படுவது தொடர்ந்து நடைபெறுகிறது.

இதனால் ஏற்படும் இழப்புகளை விவசாயிகளே சந்திக்க வேண்டி இருக்கிறது. அதனால்தான் பாரதிய கிசான் சங்கம் வன்முறை போராட்டத்தை ஆதரிக்கவில்லை. அதனால்தான் 'டெல்லி சலோ' பேரணிக்கு ஆதரவளிக்கவில்லை.

தங்கள் அரசியல் லட்சியங்களை நிறைவேற்ற விரும்புவோர் அதைத் தொடரலாம் . ஆனால் அவர்களால் விவசாயிகள் மீது தவறான எண்ணங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது. அரசியல் நோக்கத்துடன் சிலர் விவசாயிகளை தங்கள் அரசியல் நலன்களை மேம்படுத்த பயன்படுத்துவது வேதனை அளிக்கிறது

எனவே, விவசாயிகளின் பெயரில் நடத்தப்படும் அரசியல் மற்றும் தேர்தல் சூழ்ச்சிகள் நிறுத்தப்பட வேண்டும். இன்று, விதை மற்றும் சந்தைதான் விவசாயிகளின் முக்கிய பிரச்சினைகள். சந்தையில் விவசாயிகள் சுரண்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story