இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த வங்காளதேச பயங்கரவாத அமைப்பினர் கைது
இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேச பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 2 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
போபால்,
வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில், சில பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களும் இந்தியாவுக்குள் நுழைகின்றனர்.
இந்நிலையில், மத்தியபிரதேச தலைநகர் போபாலில் தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், ஹமிதுல்லா, முகமது சஹதத் ஹசன் ஆகிய 2 பேரை கைது செய்தார். கைது செய்யப்பட்ட 2 பேரும் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும் இருவரும் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மேலும், 2 பேரும் ஜமாத் அல் முஜாகிதின் வங்காளதேசம் என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 2 பேருடனும் மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் இந்தியாவில் தாக்குதல் நடத்த இளைஞர்களை மூளைச்சலவை செய்தது தெரியவந்தது. மேலும், வெறுப்புணர்வு தூண்டக்கூடிய கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வெளியிட்டு வந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.