பீகார்: ஓடும் பாம்பை போதையில் பிடித்து நச், நச்சென முத்தமிட்ட வாலிபர்


பீகார்: ஓடும் பாம்பை போதையில் பிடித்து நச், நச்சென முத்தமிட்ட வாலிபர்
x

பீகாரில் ஓடும் விஷ பாம்பை பிடித்து போதையில் இருந்த வாலிபர் ஒருவர் தொடர்ச்சியாக முத்தமிட்டு உள்ளார்.



பாட்னா,


பீகாரின் நவாடா மாவட்டத்தில் கோவிந்த்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் திலீப் யாதவ். குடிபோதையில் இருந்த அந்த நபர், பாம்பு ஒன்றை கொஞ்சி விளையாடியபடி இருந்து உள்ளார்.

அவர் தனது காதலியை போன்று அதனுடன் விளையாடியதுடன், தொடர்ந்து பல முறை முத்தமிட்டு உள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பயத்தில் அலறினர். அதனை கீழே விடும்படி கூறியுள்ளனர்.

ஆனால், அதனை எல்லாம் காதில் போட்டு கொள்ளாத அந்த வாலிபர் ஒரு கட்டத்தில் அந்த பாம்பை திட்ட தொடங்கினார். பின்னர் அதனை கையில் பிடித்தபடி ஒரு கோவிலுக்கு சென்றார். மன்னிப்பு கேட்பது போல் கடவுள் முன் தலை வணங்கி உள்ளார்.

அதன்பின்பு, கோவிலில் இருந்து வெளியேறிய அவர், புன்னகை பூத்த முகத்துடன் பாம்பை கழுத்தில் போட்டு கொண்டு நடனம் ஆடியுள்ளார். திடீரென அந்த பாம்பை தரையில் வீசி, சுற்றியிருந்தவர்களுக்கு அச்சம் உண்டாக்கினார்.

நடந்த விசயங்களால் பயந்து போயிருந்த அந்த பாம்பு ஓடி, ஒளிந்து விட்டது. ஆனால், அதன்பின்னர் அந்த சோக சம்பவம் நடந்தது. அந்த வாலிபர் மயங்கி, விழுந்து உள்ளார். அதன்பின்னரே, அந்த பாம்பு அவரை கடித்து உள்ளது என உணர்ந்த அக்கம்பக்கத்தினர், உடனே அவரை கோவிந்த்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் உயிரிழந்து விட்டார்.

சமீபத்தில், இதே பீகாரில் சிவான் மாவட்டத்தில் பாம்பு ஒன்றை தோளில் போட்டபடி போதையில் இருந்த இந்திரஜீத் என்ற வாலிபர் ஒருவர் அதனை பல முறை தனது வாய்க்குள் விட்டு உள்ளார். இந்த சாகச செயலை பார்க்கும்படி மக்களை கேட்டபடி இருந்து உள்ளார்.

எனினும், அதனை விட்டு விடும்படி சுற்றியிருந்த மக்கள் அச்சத்தில் கூச்சல் போட்டனர். ஆனால், அதற்குள் குமன் எனப்படும் விஷ வகையை சேர்ந்த அந்த நாக பாம்பு அவரை கடித்ததில் மயக்கமடைந்து, சரிந்து உள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் கூறி விட்டனர்.


Next Story