பீகாரில் முதல்-மந்திரி பாதுகாப்பு வாகனங்கள் மீது கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட 13 பேர் அதிரடியாக கைது!
பீகார் முதல் மந்திரி பாதுகாப்பு வாகனங்கள் மீது கல் வீசியதாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாட்னா,
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் பதவி வகித்து வருகிறார். சமீபத்தில், பா.ஜ.க.வுடனான கூட்டணியில் இருந்து வெளியேறிய அவர், முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகினார்.
இதன் பின்னர், ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் முதல்-மந்திரியானார். ராஷ்டீரிய ஜனதா தள கட்சியை சேர்ந்த தேஜஸ்வி யாதவ் பீகார் துணை முதல்-மந்திரியானார்.
இந்த நிலையில், பாட்னா மாவட்டத்தின் சோகி பகுதியில் முதல்-மந்திரி நிதிஷ் குமாரின் பாதுகாப்பு வாகனங்கள் நேற்று அணிவகுத்து சென்றன. அவற்றின் மீது திடீரென சில மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
எனினும், சம்பவம் நடந்தபோது, எந்த வாகனத்திலும் நிதிஷ் குமார் பயணிக்கவில்லை என தகவல் தெரிவிக்கின்றது. கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் யாரென அடையாளம் காண இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாரின் பாதுகாப்பு வாகனங்கள் கான்வாய் மீது நேற்று கல் வீசி தாக்குதல் நடத்தியதாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.