பீகார் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை; கணவனான 17 வயது சிறுவன் கைது
பெங்களூருவில் பீகார் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவளது கணவனான 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
தொட்டகம்மனஹள்ளி:
பீகாரை சேர்ந்தவர்கள்
பெங்களூரு தொட்டகம்மனஹள்ளியில் பீகாரை சேர்ந்த தம்பதி வசித்து வந்தனர். அவர்கள் அந்த பகுதியில் கட்டுமான வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் தம்பதிக்கு இடையே நீண்டநாட்களாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி இருவரும் சண்டைபோட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த பெண் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பீகாரை சேர்ந்த அவர்கள் 2 பேரும் மைனர் என்பது தெரிந்தது. அந்த பெண்ணுக்கு 15 வயது ஆவதும், அவளது கணவனுக்கு 17 வயதாவதும் தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருப்பதியில் திருமணம் செய்துகொண்ட அவர்கள், பெங்களூருவுக்கு வந்து தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர். வேலை செய்த இடத்தில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
போக்சோ வழக்கில் கைது
இதில் மனமுடைந்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. மேலும், விசாரணையின் சிறுமின் தந்தை, துமகூருவில் கட்டுமான வேலை செய்து வந்ததும், அப்போது தான் பீகாரில் இருந்த சிறுமியை சிறுவன் கடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து சிறுவனை போக்சோ வழக்கில் கைது செய்த போலீசார், அவரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.