பஞ்சாயத்துகளை அழிக்க பா.ஜனதா முயற்சி; முன்னாள் எம்.எல்.ஏ. ஆஞ்சனேயா தாக்கு


பஞ்சாயத்துகளை அழிக்க பா.ஜனதா முயற்சி; முன்னாள் எம்.எல்.ஏ. ஆஞ்சனேயா தாக்கு
x

பஞ்சாயத்துகளை அழிக்க பா.ஜனதா முயற்சி செய்துவருவதாக முன்னாள் எம்.எல்.ஏ. ஆஞ்சனேயா கூறினார்.

சிக்கமகளூரு;

ஆலோசனை கூட்டம்

சித்ரதுர்கா மாவட்டம் பரமசாகர் அருகே பலகல் கிராமத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் எம்.எல்.ஏ. ஆஞ்சனேயா பேசியதாவது:-

நாட்டில் உள்ள பஞ்சாயத்துகளின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மறைந்த பிரதமருமான ராஜீவ் காந்தி பஞ்சாயத்து துறையை மேம்படுத்தி, நீண்டகால வளர்ச்சி பாதைக்கு வித்திட்டார். அதன் வெற்றியாக ஒரு பாமர மனிதன் கூட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.

மேலும், பஞ்சாயத்து தலைவருக்கு காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரம் கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது ஆளும் பா.ஜனதா அவற்றை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. நரேகா திட்டத்தின் கீழ் முறையாக நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது. அந்த திட்டத்தால் கிராமங்களில் வளர்ச்சி உண்டாகும். கிராமங்கள் வளர்ச்சி அடைய கூடாது என்பதற்காக பா.ஜனதா அரசு முறையாக நிதி ஒதுக்காமல் உள்ளது.

பஞ்சாயத்து தேர்தல்

மேலும், மாவட்ட மற்றும் தாலுகா பஞ்சாயத்து தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. இதனால் பஞ்சாயத்துகளுக்கு தலைவர்கள் நியமிக்கப்படாமல், அதிகாரிகள் வசம் அனைத்து அதிகாரங்களும் உள்ளது.

பஞ்சாயத்துகளை அழிக்க பா.ஜனதா முயற்சி செய்துவருவது இதில் இருந்தே தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் பஞ்சாயத்து முன்னாள் துணை தலைவர் திப்பேசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story