பா.ஜனதாவின் சதியால் ராகுல் காந்தியின் பாதயாத்திரையை தடுக்க முடியாது-ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பேட்டி
பா.ஜனதாவின் சதியால் ராகுல் காந்தியின் பாதயாத்திரையை தடுக்க முடியாது என்று கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.
மண்டியா:
கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா மண்டியாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
வெற்றி பெறாது
ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் சோனியா காந்தி கலந்து கொண்டார். அவரது நம்பிக்கை, தியாகம், நாட்டை முன்னேற்ற அவரிடம் இருக்கும் உறுதி காரணமாக அவர் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்தார்.
இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கு உற்சாகம் ஏற்பட்டுள்ளது. இந்த யாத்திரையால் பா.ஜனதா மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளது.
இதனால் பத்திரிகைகளில் அந்த கட்சியினர் பொய் விளம்பரம் கொடுக்கிறார்கள். தவறான தகவல்களை பரப்புகிறார்கள். ஆனால் பா.ஜனதாவின் சதியால் ராகுல் காந்தியின் பாதயாத்திரையை தடுத்து நிறுத்த முடியாது. டி.கே.சிவக்குமார் மீது பொய் வழக்குகளை போடுகிறார்கள். அதனால் அவரது தன்னம்பிக்கையை சிதைக்க முயற்சி செய்கிறார்கள். பா.ஜனதாவின் இந்த முயற்சி வெற்றி பெறாது.
நடவடிக்கை எடுக்கவில்லை
கர்நாடகத்தில் பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் பா.ஜனதா அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது சட்டசபை தேர்தல் நெருங்குவதால் மீண்டும் ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது.
அடுத்த 15 நாட்களுக்குள் பழங்குடியின சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறினார்.