ராகுல்காந்தி பாதயாத்திரையால் பா.ஜனதாவுக்கு லாபம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
ராகுல்காந்தி பாதயாத்திரையால் பா.ஜனதாவுக்கு தான் லாபம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
மைசூரு:
பசவராஜ் பொம்மை
உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த தசரா விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, தசரா விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று மைசூருவுக்கு வந்தார்.
மைசூரு விமான நிலையத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பா.ஜனதாவுக்கு லாபம்
ராகுல்காந்தியின் பாதயாத்திரையை பார்த்து நாங்கள் பயப்படவில்லை. முன்பு தேர்தல் சமயத்தில் இதேபோன்று அவர் பாதயாத்திரை நடத்தினார். அவர் பாதயாத்திரை சென்றாரோ அங்கெல்லாம் காங்கிரஸ் தோல்வி அடைந்து, பா.ஜனதா வெற்றி கொடி நாட்டி உள்ளது. இதனால் ராகுல்காந்தி கர்நாடகம் வந்தாலும் கவலையில்லை. ராகுல்காந்தி பாதயாத்திரையால் பா.ஜனதாவுக்கு தான் லாபம்.
மைசூரு நகர் தசரா விழாவுக்காக தயாராகி உள்ளது. அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இரவு மின்விளக்கு அலங்காரத்தை சுற்றி பார்க்க உள்ளேன். ஜனாதிபதி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எந்தவித பிரச்சினையும் இல்லாமல் தசரா விழா சிறப்பாக கொண்டாடப்படும்.
அவ பிரசாரம்
'பே.சி.எம்.' விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் கீழ்தரமான அரசியல் செய்து வருகிறார்கள். இது தான் அவர்களின் தரம். காங்கிரசாரின் நடவடிக்கைகளை மக்களர் பார்த்து கொண்டு தான் உள்ளனர். காங்கிரசார் தங்களிடம் ஆதாரங்கள் எதுவும் இருந்தால் அதனை போலீசார் அல்லது லோக் அயுக்தாவிடம் கொடுக்கலாம்.
ஆனால் காாங்கிரசார் வாக்கு வங்கிக்காக இதுபோன்ற அவ பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோன்று அவ பிரசாரம் செய்து தங்களின் தரத்தை தாழ்த்தி கொள்கிறார்கள். காங்கிரஸ் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். இதுபோன்ற அவபிரசாரம் செய்வது சரியல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.