சித்தராமையா பிறந்த நாள் மாநாடு எதிரொலி: பா.ஜனதா தனது பலத்தை நிரூபிக்க தீவிரம்


சித்தராமையா பிறந்த நாள் மாநாடு எதிரொலி:  பா.ஜனதா தனது பலத்தை நிரூபிக்க தீவிரம்
x

சித்தராமையா பிறந்த நாள் மாநாட்டில் லட்சக்கணக்கானேர் கூடிய நிலையில் பா.ஜனதா தனது பலத்தை நிரூபிக்க தீவிரமாக தயாராகி வருகிறது.

பெங்களூரு: சித்தராமையா பிறந்த நாள் மாநாட்டில் லட்சக்கணக்கானேர் கூடிய நிலையில் பா.ஜனதா தனது பலத்தை நிரூபிக்க தீவிரமாக தயாராகி வருகிறது.

அரசியலில் திருப்பம்

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவின் பிறந்த நாள் பவள விழாவையொட்டி தாவணகெரேயில் கடந்த 3-ந் தேதி பிரமாண்ட மாநாடு நடத்தப்பட்டது. இதில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக சித்தராமையா கூறினார். இந்த மாநாடு கர்நாடக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். இந்த மாநாட்டுக்கு கூடிய கூட்டத்தை பார்த்து ஆளும் பா.ஜனதா சற்று நடுக்கம் அடைந்துள்ளது.

சித்தராமையா மாநாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆளும் பா.ஜனதா தனது ஆட்சியின் சாதனை விளக்க மாநாட்டை மிக பிரமாண்டமான முறையில் நடத்துவது குறித்து அக்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தாவணகெரே, கடலோர மாவட்டம் அல்லது வட கர்நாடகத்தில் ஏதாவது ஒரு மாவட்டத்தில் இந்த மாநாட்டை நடத்தி பலத்தை நிரூபிக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

சாதனை விளக்க மாநாடு

அக்கட்சியை சேர்ந்த ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ., அரசின் சாதனை விளக்க மாநாட்டை தாவணகெரேயிலேயே நடத்த வேண்டும் என்று கட்சி தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மொத்தத்தில் சித்தராமையா பிறந்த நாள் மாநாடு பா.ஜனதா தலைவர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

மேலும் அந்த மாநாட்டில் கூடிய கூட்டத்தை பா.ஜனதா மேலிடமும் தீவிரமாக எடுத்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story