அரசியல் ஆதாயத்திற்காக வீரசாவர்க்கரின் பெயரை பா.ஜனதா பயன்படுத்துகிறது; இந்து மகாசபா குற்றச்சாட்டு
அரசியல் ஆதாயத்திற்காக வீரசாவர்க்கரின் பெயரை பா.ஜனதா பயன்படுத்துகிறது என இந்து மகாசபா குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
மங்களூரு;
இந்து மகாசபா மாநில பொதுச்செயலாளர் தர்மேந்திரா, மங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சுதந்திர போராட்டத்தில் வீரசாவர்க்கரின் பங்களிப்பை பற்றி இத்தனை நாட்களாக பா.ஜனதா பேசாதது ஏன்?. பா.ஜனதா ஆளும் மற்ற மாநிலங்களிலும் வீரசாவர்க்கரின் சுதந்திர போராட்டம் பங்களிப்பு பற்றி ஏன் பேசவில்லை?
தற்போது தேர்தல் நெருங்கி வருவதால் வாக்குக்காகவும், அரசியல் லாபத்திற்காகவும் வீரசாவர்க்கரின் பெயரை பா.ஜனதா பயன்படுத்துகிறது. ஏனென்றால் கர்நாடகத்தில் வளர்ச்சி பெயரில் பா.ஜனதாவால் தேர்தலை எதிர்கொள்ள முடியாது.
சித்தராமையா அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு சென்றதற்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது. பா.ஜனதாவினர் அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்வது கிடையாதா?. அப்படி இருந்தால் சித்தராமையாவை கேள்வி கேட்க எந்த தார்மீக உரிமையும் இல்லை.
சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்து அவதூறாக பேசிய சித்தராமையா மீது இந்து மகாசபை சார்பில் வழக்கு தொடரப்படும். இதனால் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை கூறுவதற்கு முடிவு கட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.