9 மாநில தேர்தல்; நட்டா தலைமையில் பா.ஜ.க. பொது செயலாளர்கள் குழு கூட்டத்தில் முக்கிய ஆலோசனை
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் கூடிய அக்கட்சியின் பொது செயலாளர்கள் அடங்கிய குழு கூட்டத்தில் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
புதுடெல்லி,
நடப்பு ஆண்டில் தெலுங்கானா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம், மேகாலயா, திரிபுரா மற்றும் நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் அக்கட்சியின் பொது செயலாளர்கள் அடங்கிய குழு கூட்டம் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.
வருகிற 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ள சூழலில் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. கூட்டத்தில், பல முக்கிய விசயங்கள் ஆலோசிக்கப்பட்டு உள்ளன.
இந்த கூட்டத்தில், தேசிய செயற்குழு கூட்டத்திற்கான தீர்மானம் இயற்றுவது, கூட்டத்திற்கான இடம் தேர்வு செய்வது மற்றும் பிற ஏற்பாடுகள் ஆகியவை பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
தேர்தலில் படைத்த சாதனைகள் பற்றியும் தீர்மானம் நிறைவேறுகிறது. கடந்த சில மாதங்களில், மக்களுக்கு பொருளாதார ரீதியில் மத்திய அரசு செய்த நலன்களுக்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் 9 மாநிலங்களில் நடைபெற இருக்கிற சட்டசபை தேர்தல் பற்றியும் முக்கிய ஆலோசனை நடைபெறும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.