பெங்களூருவில் இன்று கர்நாடக பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டம்


பெங்களூருவில் இன்று கர்நாடக பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டம்
x

கர்நாடக பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் மேலிட பொறுப்பாளர் அருண்சிங் உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

பெங்களூரு:

கர்நாடக பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் மேலிட பொறுப்பாளர் அருண்சிங் உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மாநில செயற்குழு

கர்நாடக பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நாளை (இன்று) பெங்களூருவில் நடக்கிறது. இந்த கூட்டம் காலை 10.30 மணிக்கு அரண்மனை மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 592 பேர் கலந்து கொள்கிறார்கள்.

கர்நாடகத்தை சேர்ந்த எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், மாவட்ட தலைவர்கள், பொதுச் செயலாளர்களும் கலந்து கொள்கிறார்கள். காலையில் தொடங்கி மாலை வரை கட்சியை பலப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.

இந்த பேட்டியின்போது மாநில துணைத்தலைவர் நிர்மல்குமார் சுரானா, பொதுச் செயலாளர் சித்தராஜூ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

நளின்குமார் கட்டீல்

அதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் கூறுகையில், 'கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தில் நானும், எங்கள் கட்சியின் மேலிட பொறுப்பாளர் அருண்சிங்கும் ஏற்கனவே சுற்றுப்பயணத்தை தொடங்கிவிட்டோம். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் வருகிற 11-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்கள். இந்த சுற்றுப்பயணம் வருகிற டிசம்பா் மாதம் வரை நீடிக்கும். 165 சட்டசபை தொகுதிகளில் கட்சி கூட்டங்கள் நடைபெறும்.பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவா்களும் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். வருகிற 16-ந் தேதி திரிவேணி சங்கம கும்பமேளாவில் கலந்துகொள்ள உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகிஆதித்ய நாத்தும் கர்நாடகம் வருகிறார். மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டையில் உள்ள அம்பிகாரஹள்ளி பகுதியில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார்' என்றார்.

நிர்மல்குமார் சுரானா

பா.ஜனதா மாநில துணைத்தலைவர் நிர்மல்குமார் சுரானா கூறும்போது, 'வருகிற 30-ந் தேதி கலபுரகியில் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் அணி மாநாடு நடக்கிறது. நவம்பர் மாதத்தில் பல்லாரியில் ஆதிதிராவிடர்கள் அணி மாநாடு, மைசூருவில் பழங்குடியினர் அணி மாநாடுகளை நடத்த முடிவு செய்துள்ளோம். டிசம்பா் மாதத்தில் உப்பள்ளியில் கட்சியின் விவசாய அணி மாநாடு, பெங்களூருவில் மகளிர் அணி மாநாடு, மங்களூருவில் இளைஞர் அணி மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்' எனறார்.


Next Story