முன்ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் பா.ஜனதா எம்.எல்.ஏ. மனு தாக்கல்
ரூ.40 லட்சம் லஞ்ச வழக்கில் தலைமறைவாக உள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ. மாடால் விருபாக்ஷப்பா முன்ஜாமீன் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். தன் மீது பதிவாகி இருக்கும் வழக்கையும் அவர் ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்திருக்கிறார்.
பெங்களூரு:-
எம்.எல்.ஏ. மகன் கைது
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் மாடால் விருபாக்ஷப்பா. மைசூரு சாண்டல் சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்திற்கு ரசாயனம் சப்ளை செய்ய ஒரு தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்க ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய போது பெங்களூருவில் உள்ள எம்.எல்.ஏ.வின் அலுவலகத்தில் வைத்து, மாடால் விருபாக்ஷப்பாவின் மகனும், அரசு அதிகாரியுமான பிரசாந்த் கைது செய்யப்பட்டார்.
பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் அலுவலகம் மற்றும் வீட்டில் ரூ.7.72 கோடி சிக்கி இருந்தது. இந்த லஞ்ச வழக்கு தொடர்பாக மாடால் விருபாக்ஷப்பா, பிரசாந்த் உள்பட 5 பேர் மீது லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்ததும் பா.ஜனதா எம்.எல்.ஏ.வான மாடால் விருபாக்ஷப்பா தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, அவரை கைது செய்ய லோக் அயுக்தா போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
முன்ஜாமீன் கோரி மனு
கடைசியாக தாவணகெரேயில் இருந்து சித்ரதுர்கா செல்லும் சாலையில் வைத்து மாடால் விருபாக்ஷப்பாவின் செல்போன் ஆன் செய்யப்பட்டு இருந்தது. அதன்பிறகு, செல்போன் சிக்னல் பற்றிய தகவல் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதற்கிடையில், ரூ.40 லட்சம் லஞ்ச வழக்கில் நேற்று விசாரணைக்கு ஆஜராகும்படி கோரி மாடால் விருபாக்ஷப்பாவுக்கு லோக் அயுக்தா போலீசார் நோட்டீஸ் அனுப்பி வைத்திருந்தார்கள். அவரது வீடு மற்றும் எம்.எல்.ஏ. அலுவலகத்திலும் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.
ஆனால் நேற்று அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜரானால் மாடால் விருபாக்ஷப்பா கைது செய்யப்படலாம் என்பதால், அவர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கர்நாடக ஐகோர்ட்டில் மாடால் விருபாக்ஷப்பா சார்பில் நேற்று முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
இன்று மனு விசாரணை
அதே நேரத்தில் தன் மீதான லஞ்ச வழக்கை ரத்து செய்ய கோரியும் கர்நாடக ஐகோர்ட்டில் மாடால் விருபாக்ஷப்பா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த மனு மீதான விசாரணையும் இன்று நடைபெற இருக்கிறது. இன்று நடைபெற உள்ள விசாரணையின் போது பா.ஜனதா எம்.எல்.ஏ. மாடால் விருபாக்ஷப்பாவுக்கு முன்ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகாததால் மாடால் விருபாக்ஷப்பாவை கைது செய்ய தாவணகெரே, பெங்களூரு, சித்ரதுர்கா உள்ளிட்ட மாவட்டங்களில் 7 தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்திருப்பதற்கான ஆதாரங்களை திரட்டி வரும் லோக் அயுக்தா போலீசார், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மாடால் விருபாக்ஷப்பா மீது மற்றொரு வழக்குப்பதிவு செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.