பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் கார் மோதி மூதாட்டி சாவு
கொப்பல் அருகே, பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் கார் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது.
கொப்பல்:
மூதாட்டி சாவு
கொப்பல் மாவட்டம் கனககிரி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருபவர் பசவராஜ் தடேசுகுர். இவர் நேற்று முன்தினம் தனது காரில் கனககிரியில் இருந்து காரடகி நோக்கி சென்று கொண்டு இருந்தார். காரை டிரைவர் ஓட்டினார். காரடகி அருகே மயிலாப்பூர் கிராஸ் பகுதியில் கார் சென்றபோது சாலையை கடக்க முயன்ற ஒரு மூதாட்டியின் மீது கார் மோதியது.
கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட அந்த மூதாட்டி பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பசவராஜ் தடேசுகுர், அந்த மூதாட்டியை தனது காரில் ஏற்றி சென்று காரடகி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அந்த மூதாட்டிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் அந்த மூதாட்டி உயிரிழந்து விட்டார்.
நாய் மீது மோதாமல் இருக்க...
இதுபற்றி அறிந்ததும் காரடகி போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த மூதாட்டியின் பெயர் மரியம்மா நாயக்(வயது 70) என்பது தெரியவந்தது. மயிலாப்பூர் கிராசில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்த மரியம்மா, முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்காக சாலூர் என்ற கிராமத்திற்கு சென்று இருந்தார்.
அங்கு ஓய்வூதியம் பெற்றுவிட்டு பஸ்சில் வந்து மயிலாப்பூர் கிராசில் இறங்கிய அவர் சாலையை கடக்க முயன்ற போது எம்.எல்.ஏ.வின் கார் மோதி இறந்தது தெரியவந்து உள்ளது. விபத்து குறித்து பசவராஜ் தடேசுகுர் எம்.எல்.ஏ. கூறுகையில், 'எனது கார் மோதி மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. சாலையின் குறுக்கே ஒரு நாய் திடீரென வந்தது. அந்த நாய் மீது மோதாமல் இருக்க காரை டிரைவர் திருப்பிய போது மூதாட்டி மீது கார் மோதிவிட்டது' என்றார்.