பா.ஜனதா எம்.பி. மீது லோக் அயுக்தாவில் புகார்
விஸ்வநாத் எம்.எல்.சி.க்கு ரூ.15 கோடி கொடுத்ததாக கூறிய விவகாரதில் பா.ஜனதா எம்.பி. மீது லோக் அயுக்தாவில் புகார் அளிக்கபட்டுள்ளது.
பெங்களூரு:
சாம்ராஜ்நகர் தொகுதி பா.ஜனதா கட்சியின் எம்.பி.யாக இருந்து வருபவர் சீனிவாஸ் பிரசாத். இந்த நிலையில், பா.ஜனதா எம்.எல்.சி.யாக இருக்கும் விஸ்வநாத், ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இருந்து பா.ஜனதாவில் இணைந்திருந்தார். அவர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக ரூ.15 கோடி வழங்கப்பட்டது. அந்த பணத்தை விஸ்வநாத் தேர்தலில் வெற்றி பெற செலவழிக்காமல, பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளிட்ட சொந்த தொழிலுக்கு பயன்படுத்தியதால், தோல்வி அடைந்திருந்தார் என்றும் சீனிவாஸ் பிரசாத் எம்.பி. கூறி இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூரு லோக் அயுக்தா போலீசில், காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான பிரசாந்த் புகார் அளித்துள்ளார்.
அதில், ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர விஸ்வநாத்திற்கு ரூ.15 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சீனிவாஸ் பிரசாத், விஸ்வநாத், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் பிரிவின் கீழ் விசாரிக்க வேண்டும் என்று பிரசாந்த் கூறியுள்ளார். அந்த புகாரை லோக் அயுக்தா போலீசார் பெற்றுக் கொண்டுள்ளனர். வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.