ஜனதாதளம் (எஸ்) கட்சியின் ஒக்கலிகர் வாக்கு வங்கியில் கைவைக்கும் பா.ஜனதா
கெம்பேகவுடா சிலை பிரதமர் மோடியால் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் ஒக்கலிகர் வாக்கு வங்கியில் பா.ஜனதா கைவைக்க முயற்சி செய்துள்ளது.
பெங்களூரு:
கெம்பேகவுடா சிலை பிரதமர் மோடியால் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் ஒக்கலிகர் வாக்கு வங்கியில் பா.ஜனதா கைவைக்க முயற்சி செய்துள்ளது.
லிங்காயத் சமூக ஆதரவு
கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே உள்ளன. ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகின்றன. மூன்று கட்சிகளின் தலைவர்களும் சுற்றுப்பயணத்தை தொடங்கி கட்சியை பலப்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ளனர்.
பா.ஜனதாவை பொறுத்தவரையில் வடகர்நாடகத்தில் மக்கள் செல்வாக்குடன் திகழ்கிறது. அக்கட்சிக்கு லிங்காயத் சமூகத்தின் பெரும்பான்மை ஆதரவு உள்ளது. அதே நேரத்தில் அக்கட்சி தென் கர்நாடகத்தில் குறிப்பாக மைசூரு மண்டலத்தில் பலவீனமாக உள்ளது. ஒக்கலிகர்கள் அதிகம் உள்ள இந்த பகுதியில் ஜனதாதளம் (எஸ்) பலம் வாய்ந்த கட்சியாக திகழ்கிறது. அந்த கட்சிக்கு இணையாக காங்கிரசும் பலத்துடன் உள்ளது. பா.ஜனதா 3-வது இடத்தில் தான் உள்ளது.
சொந்த பலத்தில் ஆட்சி
மைசூரு மண்டலத்தில் கே.ஆர்.பேட்டை, சிரா, ஹாசன் ஆகிய 3 தொகுதிகளில் மட்டுமே பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்களில் கே.ஆர்.பேட்டை எம்.எல்.ஏ. நாராயணகவுடா, ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிரா தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றது. மைசூரு மண்டலத்தில் மக்களின் ஆதரவை பெற்றால் மட்டுமே பா.ஜனதா சொந்த பலத்தில் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உள்ளது.
இதற்காக அக்கட்சி, காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) தலைவர்களை இழுக்க திட்டமிட்டுள்ளது. அந்த பணிகள் புறம் நடைபெற்று கொண்டிருக்கிறது. மற்றொரு புறத்தில் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் பலமான ஒக்கலிகர் வாக்கு வங்கியை தன்வசப்படுத்த பா.ஜனதா தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த நிலையில் பா.ஜனதா அரசு சார்பில் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் ரூ.84 கோடி செலவில் 108 அடி உயர கெம்பேகவுடாவின் வெண்கல நிறுவப்பட்டுள்ளது.
பா.ஜனதா முயற்சி
அந்த சிலையை பிரதமர் மோடியே நேரில் வந்து நேற்று முன்தினம் திறந்து வைத்துவிட்டு சென்றுள்ளார். இந்த விழா பிரமாண்டமான முறையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த விழா கர்நாடகத்தில் ஒருவிதமான சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒக்கலிகர்களின் மனங்களை வென்று அவர்களின் ஓட்டுகளை கவர பா.ஜனதா முயற்சி செய்துள்ளதாக எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்த விழாவின் பின்னணியில் அரசியல் இருப்பதாக அரசியல் நிபுணர்களும் கூறுகிறார்கள்.