தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்தால் வெறுப்பு தொழிற்சாலைகள் சுறுசுறுப்பாகி விடுகின்றன; காங்கிரஸ் கடும் விமர்சனம்


தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்தால் வெறுப்பு தொழிற்சாலைகள் சுறுசுறுப்பாகி விடுகின்றன; காங்கிரஸ் கடும் விமர்சனம்
x

தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்தால் வெறுப்பு தொழிற்சாலைகள் சுறுசுறுப்பாகி விடுகின்றன என்று பா.ஜனதாவை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

பெங்களூரு:

தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்தால் வெறுப்பு தொழிற்சாலைகள் சுறுசுறுப்பாகி விடுகின்றன என்று பா.ஜனதாவை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

முஸ்லிம்கள் வெற்றி

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தலில் முஸ்லிம்கள், ஒக்கலிகர்கள், தலித் மக்கள் அதிகளவில் காங்கிரசுக்கு வாக்களித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாக வக்பு வாரிய தலைவர் ஷபி சாடி முஸ்லிம் சமூகத்திற்கு துணை முதல்-மந்திரி பதவி மற்றும் 5 மந்திரி பதவிகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதை குறிப்பிட்டு பா.ஜனதா தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

துணை முதல்-மந்திரி பதவி, 5 மந்திரிகள் பதவியை முஸ்லிம் சமூகத்திற்கு வழங்க வேண்டும் என்று கர்நாடக வக்பு வாரிய தலைவர் கூறியுள்ளார். போலீஸ், கல்வி, வருவாய் துறைகளை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தங்களுக்கு 30 தொகுதிகள் வழங்கி இருக்க வேண்டும் என்றும், 15 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும், அதில் 9 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்று இருப்பதாகவும் அந்த வாரிய தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரசின் ஆதரவால்...

காங்கிரஸ் கட்சி 72 தொகுதிகளில் முஸ்லிம்களின் ஆதரவால் வெற்றி பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். முஸ்லிம் சமூகத்திற்கு இந்த பதவிகளை வழங்கி காங்கிரஸ் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று வக்பு வாரிய தலைவர் தெரிவித்துள்ளார். இதை பார்க்கும்போது, காங்கிரஸ் இந்த தேர்தலில் வெற்றி பெற்று இருக்காது. இதை அக்கட்சி தலைவர்கள் உணர்ந்துள்ளனர். ஆனால் துரதிருஷ்டவசமாக அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இவ்வாறு அமித் மால்வியா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது:-

பா.ஜனதா வெற்றி பெற்றால் அக்கட்சி கருணையற்ற முறையில் நடந்து கொள்கிறது. தோல்வி அடைந்தால் அவமானப்படுத்துகிறது. கா்நாடகத்தில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதை பா.ஜனதா விமர்சிக்கிறது. வெறுப்பு, விஷத்தை தயாரிக்கும் தொழிற்சாலைகள் (பா.ஜனதா) சுறுசுறுப்பாக செயல்படுகின்றன. கர்நாடக மக்கள் அறிவாளிகள். அவர்கள் விழிப்புடன் உள்ளனர். இத்தகைய சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் விஷமம் நிறைந்தவர்களை கர்நாடக மக்கள் தோற்கடிப்பார்கள்.

இவ்வாறு காங்கிரஸ் தெரிவித்துள்ளது.


Next Story