திருவனந்தபுரத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்: தடியடி-கண்ணீர் புகை குண்டு வீச்சு


திருவனந்தபுரத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்: தடியடி-கண்ணீர் புகை குண்டு வீச்சு
x

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ராஜினாமா செய்யக்கோரி, நேற்று திருவனந்தபுரத்தில் பா.ஜனதா இளைஞர் பிரிவினர் போராட்டம் நடத்தினர்.

திருவனந்தபுரம்,

முதல்-மந்திரி பினராயி விஜயன் பதவி விலகக்கோரி திருவனந்தபுரத்தில் பா.ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.

கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுவப்னா சுரேஷ் கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் கொடுத்தார். அதில் தங்க கடத்தலில் முதல்-மந்திரி பினராயி விஜயன், அவருடைய மனைவி கமலா, மகள் வீணா விஜயன் ஆகியோருக்கும் தொடர்பு இருந்ததாக கூறினார். அதை தொடர்ந்து, முதல்-மந்திரி பதவியை விட்டு பினராயி விஜயன் விலக வலியுறுத்தி காங்கிரஸ், பா.ஜனதா உள்பட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக நேற்று திருவனந்தபுரத்தில் பா.ஜனதா கட்சியின் இளைஞர் மற்றும் பெண்கள் அமைப்பினர் தலைமை செயலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில தொண்டர்கள் தடுப்பு வேலிகளை தாண்டி தலைமை செயலகத்திற்குள் நுழைய முயன்றனர்.

அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் போலீசார் கலைக்க முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த தொண்டர்கள் போலீசாரை தாக்க முயன்றனர். அதை தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை 3 முறை வீசினர். இந்த நிலையில் கருப்பு உடையணிந்து வந்த பா.ஜனதா கவுன்சிலர்கள் தலைமைச்செயலக தடுப்பு மதிலை தாண்டி குதிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை பெண் போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்களை தரதரவென இழுத்து சென்று அப்புறப்படுத்தினர்.

தங்க கடத்தலில் மகள் வீணா விஜயனை காப்பாற்றுவதற்காக, போராட்டத்தில் ஈடுபடும் பெண்களை போலீசாரை வைத்து ஒடுக்க பினராயி விஜயன் முயல்வதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்தநிலையில் நேற்று மீண்டும் கோழிக்கோடு குற்றியாடி அம்பலக் குளங்கரை மண்டல காங்கிரஸ் அலுவலகத்தின் மீது மர்ம ஆசாமிகள் குண்டுகளை வீசினார்கள். இதில் கட்சி அலுவலகம் சேதம் அடைந்தது. நேற்று அதிகாலை நடந்த இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அலுவலக ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தது.

குண்டு வீச்சை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கெ.சுதாகரன் எம்.பி. கூறும் போது, 'ஆளுங்கட்சி தொண்டர்களும், ஆதரவு இளைஞர் அமைப்புகளும் தொடர்ந்து காங்கிரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்ந்தால் நாங்களும் எதிர் தாக்குதலில் ஈடுபட நேரிடும். முதல்-மந்திரி பினராயி விஜயன் தனது பதவியையும், அரசு இல்லத்தையும் தங்கம் கடத்தலுக்கு உபயோகித்து இருப்பதைதான் எதிர்க்கிறோம்' என்றார்.


Next Story