என் மீது தனிப்பட்ட தாக்குதல் தொடுக்க பா.ஜ.க. ஆயிரம் கோடி பணம் செலவு: ராகுல் காந்தி அதிரடி குற்றச்சாட்டு
என் மீது தனிப்பட்ட தாக்குதல்களை தொடுப்பதற்காக பா.ஜ.க. ஆயிரம் கோடி அளவுக்கு பணம் செலவழித்து உள்ளது என ராகுல் காந்தி அதிரடி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
இந்தூர்,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு எம்.பி.யான ராகுல்காந்தி, பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கினார்.
இந்திய ஒற்றுமை பயணம் என அழைக்கப்படும் இந்த பாதயாத்திரையானது காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் வரை தொடரும். இதுவரை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என தென்னிந்திய பகுதிகளை முடித்து கொண்டு மராட்டிய மாநிலத்திற்கு சென்றார்.
அதன்பின்பு, கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய பிரதேச எல்லைக்குள் வந்த அவர் தொடர்ந்து பாதயாத்திரையில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் காங்கிரஸ் தொண்டர்களும் மூவர்ண கொடியை ஏந்தியபடி உற்சாகமுடன் நடந்து செல்கின்றனர். மத்திய பிரதேசத்தில், ராகுல் காந்தி பாதயாத்திரை 12 நாட்கள் நடக்கிறது. அங்கு 380 கி.மீ. தூரம் நடைபயணம் செல்கிறார்.
இந்த நிலையில், இந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, பா.ஜ.க. எனது தோற்றத்தினை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஆயிரம் கோடி அளவுக்கு பணம் செலவழித்து உள்ளது என அதிரடி குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
அவர்கள் என்னை பற்றிய ஒரு தோற்றம் உருவாக்கி வைத்துள்ளனர். அது தீங்கு தர கூடியது என மக்கள் நினைக்கின்றனர். ஆனால், அது எனக்கு நன்மையே.
ஏனெனில், என்னிடம் உண்மை உள்ளது. என் மீது நடத்தப்படும் தனிப்பட்ட தாக்குதல்கள், நான் சரியான திசையில் செல்கிறேன் என்று எனக்கு எடுத்து கூறுகிறது என்று பேசியுள்ளார்.