தனிநபர் மீது கருத்து தெரிவிக்கவில்லை; எனது கருத்தை தவறாக பயன்படுத்த பாஜக முயற்சி: மல்லிகார்ஜுன கார்கே
பிரதமர் மோடிக்கு எதிராக ராவணன் என்ற வார்த்தையை கார்கே பயன்படுத்தியதாக பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர்.
ஆமதாபாத்,
ஆமதாபாத்தில் இந்த வாரம் நடந்த பேரணியில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, "அனைத்துத் தேர்தல்களிலும் தனது முகத்தைப் பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.நீங்கள் ராவணனைப் போல் 100 தலைகளை கொண்டவரா?" என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ராவணன் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கார்கே தனது கருத்துக்கு முதல்முறையாக பதிலளித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி தனது கருத்துக்களை தேர்தல் ஆதாயத்திற்காக தவறாக பயன்படுத்துகிறது என்று கூறினார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியதாவது,
காங்கிரஸ் கட்சியின் அரசியல் என்பது எந்த ஒரு நபருக்கும் எதிரானது அல்ல. நமது அரசியல், கொள்கைகள் சார்ந்தது. நாங்கள் செயல்திறன் அரசியலை நம்புகிறோம், ஆனால் பாஜகவின் அரசியல் பாணி, பெரும்பாலும் ஜனநாயக உணர்வைக் கொண்டிருக்கவில்லை.
நான் எந்த ஒரு தனிமனிதர் மீதும் கருத்து தெரிவிப்பதில்லை அல்லது தனிப்பட்ட கருத்துக்களை கூறுவதில்லை.வளர்ச்சி, பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை போன்ற பிரச்சனைகளில் நான் (பாஜக அரசை) விமர்சித்தேன்.
பாஜகவின் அரசியல் எல்லா இடங்களிலும் ஒரு குறிப்பிட்ட நபரை மையமாகக் கொண்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியை பாஜகவின் 'பி டீம்', யாரோ ஒருவரின் விருப்பத்தின் பேரில் காங்கிரஸின் வாக்குகளை வெட்ட ஆம் ஆத்மி முயற்சிக்கிறது என்று கூறினார்.