கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும்- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு


கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும்-  முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
x

கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

பெங்களூரு: கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

கலபுரகியில் நேற்று நடைபெற்ற பா.ஜனதாவின் பிற்படுத்தப்பட்டோர் அணி மாநாட்டில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-

வாக்கு வங்கி

கர்நாடகத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையா பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் மேம்பாட்டிற்கு எதையும் செய்யவில்லை. ஆனால் அந்த சமூக மக்களை காங்கிரஸ் கட்சி தங்களின் வாக்கு வங்கியாக பயன்படுத்தி கொண்டது. இனி அந்த மக்கள் ஏமாற மாட்டார்கள். பின்தங்கிய சமூக மக்களின் மேம்பாட்டிற்கு நாங்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.

சித்தராமையா தனது ஆட்சியில் கர்நாடகத்தை பின்தங்கிய மாநிலமாக மாற்றினார். தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை நாங்கள் அதிகரித்துள்ளோம். இது நாங்கள் எடுத்த புரட்சிகரமான முடிவு. குருப சமூகத்தின் மேம்பாட்டிற்காக ரூ.354 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். சமூக நீதி, சமத்துவத்தை ஏற்படுத்த நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.

தடுக்க முடியாது

கல்யாண-கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளேன். வருகிற ஆண்டில் அதை ரூ.5 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்படும். பா.ஜனதாவின் தொடர் வெற்றிகளை காங்கிரஸ் கட்சியால் தடுக்க முடியாது. கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும். வறுமை இல்லாத கல்யாண-கர்நாடகத்தை ஏற்படுத்த நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இதற்காக நீங்கள் பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

அதைத்தொடர்ந்து எடியூரப்பா பேசுகையில், "பிற்படுத்தப்பட்ட சமூகங்களை காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கியாக பயன்படுத்தி கொண்டு அவர்களுக்கு துரோகம் செய்தது. நான் ரத யாத்திரையை மேற்கொள்ள உள்ளேன். இந்த யாத்திரை மைசூருவில் இருந்து தொடங்கும். நாங்கள் கட்சியை பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது? என்றார்.


Next Story