பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பா.ஜனதாவின் லஞ்ச பட்டியல் பேனர்
பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்ட பா.ஜனதாவின் லஞ்ச பட்டியல் பேனர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த பா.ஜனதா அரசு மீது 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் கர்நாடகத்தில் நடைபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வில் முறைகேடு, மின்துறையில் இளநிலை உதவியாளர் தேர்வில் நடைபெற்ற முறைகேடு உள்ளிட்ட முறைகேடுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் ஊழல் மற்றும் முறைகேடு அரசு என கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பெங்களூரு நகரில் முக்கிய சாலைகளில் உள்ள சுவர்களில் "பே-சி.எம்" என்ற வாசகத்துடன் கூடிய போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தன. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு ஒரு பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் பா.ஜனதா லஞ்ச விகித அட்டை என்ற தலைப்பில் அரசு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட கமிஷன் விவரங்கள் பிரசுரிக்கப்பட்ட உள்ளது . கொரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசு ஒப்பந்தங்களுக்கு 75 சதவீத கமிஷன், பொதுபணித்துறை, மடங்களுக்கு நிதி ஒதுக்குவது போன்றவற்றுக்கு தலா 40 சதவீத கமிஷன் என்று பட்டியலிடப்பட்டு உள்ளது. மேலும் முதல்-மந்திரி பதவிக்கு ரூ.2,500 கோடி என்றும், மந்திரி பதவிக்கு ரூ.500 கோடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.