தெலுங்கானா மாநில பாஜக தலைவர் அதிரடி கைது
தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐதராபாத்,
டெல்லி கெஜ்ரிவால் அரசில் துணை முதல்-மந்திரியாக பதவி வகித்து வரும் மணீஷ் சிசோடியா, கல்வி, ஆயத்தீர்வை உள்ளிட்ட துறைகளை கவனித்து வருகிறார். அங்கு மதுபான ஆயத்தீர்வை கொள்கை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ., மணீஷ் சிசோடியா, ஆயத்தீர்வை முன்னாள் ஆணையர் அரவா கோபி கிருஷ்ணா மற்றும் 2 அரசு அதிகாரிகளின் வீடுகள் உள்பட 31 இடங்களில் கடந்த 19-ம் தேதி அதிரடி சோதனை நடத்தியது.இந்த விவகாரத்தில் மணீஷ் சிசோடியா உள்பட 15 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், மதுபான ஆயத்தீர்வை கொள்கை வகுப்பது, மதுபான கடை உரிமை வழங்குவதில் நடைபெற்ற முறைகேட்டில் டெல்லி துணை - மந்திரி மணீஷ் சிசோடியாவிற்கும் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகள் கவிதாவுக்கு தொடர்பு உள்ளதாக தெலுங்கானா பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரான கவிதாவின் வீட்டின் முன் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
பாஜகவின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தெலுங்கானா முழுவதும் பாஜக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் அம்மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் அறிவித்தார்.
இந்நிலையில், தெலுங்கானா மாநில பாஜக தலைவர் சஞ்சய் குமாரை தெலுங்கானா போலீசார் இன்று கைது செய்துள்ளனர். ஜங்கொன் நகரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்த சஞ்சய் குமாரை போலீசார் கைது செய்தனர்.