ராஜகால்வாயில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் பிணமாக மீட்பு


ராஜகால்வாயில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் பிணமாக மீட்பு
x

பெங்களூருவில் பெய்த கனமழையால் ராஜகால்வாயில் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்ட வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார். நகைக்கடையில் மழைநீர் புகுந்ததால் ரூ.2 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:-

கனமழை கொட்டி தீர்த்தது

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. சூறை காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை கொட்டியது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டிய கனமழையால் தாழ்வான பகுதிகளில், சாலைகள் மற்றும் சுரங்க சாலைகளில் குளம்போல் வெள்ளநீர் தேங்கியது. இந்த நிலையில் கே.ஆர். சர்க்கிளில் உள்ள சுரங்க சாலையில் தேங்கிய மழைநீரில் கார் சிக்கியதில், அதில் பயணம் செய்த பானுரேகா என்ற இளம்பெண் உயிரிழந்தார்.

இந்த நிலையில் ராஜகால்வாயில் விழுந்து அடித்து செல்லப்பட்டு வாலிபர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

பிணமாக மீட்பு

பெங்களூரு கே.பி.அக்ரஹாரா பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 27). இவர் நேற்று முன்தினம் கனமழை பெய்தபோது வெளியே சென்றுள்ளார். அப்போது ராஜகால்வாய் அருகே சென்றபோது அவர், தவறி உள்ளே விழுந்தார். ராஜகால்வாயில் தண்ணீர் அதிகமாக சென்றதால் லோகேஷ் அடித்து செல்லப்பட்டார். இதனை அறிந்த அந்தப்பகுதி மக்கள் தீயணைப்பு படையினர் உதவியுடன் தீவிரமாக தேடினர்.

இந்த நிலையில் நேற்று காலை பேடராயனபுரா பகுதியில் உள்ள ராஜகால்வாயில் லோகேஷ் பிணமாக கிடந்தார். இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கே.பி.அக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெங்களூருவில் கனமழைக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நகைக்கடையில் தண்ணீர் புகுந்தது

பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் கணேஷ் பிளாக் பகுதியில் பிரியா என்பவருக்கு சொந்தமான நகைக்கடை ஒன்று உள்ளது. இந்த கடை தரைமட்டத்திற்கும் கீழ் உள்ளது. நேற்று முன்தினம் பெய்த கனமழையால் தரைமட்டத்துக்கு கீழே உள்ள அந்த கடையில் மழைநீர் புகுந்தது. அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது போல கடையின் படிக்கட்டுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

இதனால் நகைக்கடையில் இருந்த தங்க நகைகள் மற்றும் பொருட்கள் தண்ணீரில் மூழ்கின. நகைகள் தண்ணீரில் மிதந்தன. பின்னர் பின்புற கதவை ஊழியர்கள் திறந்ததால் தண்ணீர் வடிய தொடங்கியது.

ரூ.2 கோடிக்கு இழப்பு

நகைக்கடையில் மழைநீர் புகுந்ததால், அங்கிருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம், நாற்காலிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இதுபற்றி தகவல் கொடுத்தும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வரவில்லை என தெரிகிறது. இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர் பிரியா கூறுகையில், திடீர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், கடையில் இருந்த பணம் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட நகைகள் அடித்து செல்லப்பட்டன. இதனால் சுமார் ரூ.2 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

இதுகுறித்து மல்லேசுவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மரங்கள் சாய்ந்தன

பெங்களூருவில் நேற்று பலத்த மழை கொட்டியதுடன், சூறாவளி காற்றும் வீசியது. இதனால் நகரில் பல பகுதிகளில் ராட்சத மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கப்பன் பூங்காவில் மட்டும் நூற்றுக்கணக்கான மரங்கள் சாய்ந்து விழுந்தன. மேலும் கே.இ.பி. லே-அவுட், கால்நடை மருத்துவமனை கல்லூரி, ராஜாஜிநகர் உள்பட பல பகுதிகளில் பல ஆண்டுகள் பழமையான மரங்களும் சாய்ந்து விழுந்தன.

மரங்களின் கிளைகளும் முறிந்து கீழே விழுந்தன. மரங்கள் விழுந்தும், கிளைகள் விழுந்தும் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. நேற்று மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். மரங்கள் சாய்ந்து விழுந்ததால் கேபிள் வயர்கள், மின்வயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. ஒட்டுமொத்தத்தில் பெங்களூருவில் கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.


Next Story