பெங்களூருவில் தனியார் நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
தனியார் நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களின் கைவரிசையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு:-
வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூரு ஈகோ ஸ்பேஸ் பகுதியில் ஐ.பி.டி.ஓ. என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவன அலுவலகத்திற்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பை எடுத்து அங்கிருந்த ஊழியர் பேசினார். அப்போது எதிர் முனையில் பேசிய மர்மநபர், உங்கள் நிறுவனத்தில் வெடிகுண்டு வைத்து இருக்கிறேன், அது சில மணி நேரத்தில் வெடித்து, கட்டிடமே இடிந்து விழுந்துவிடும் என்று கூறி உள்ளார். மேலும் உடனடியாக செல்போன் அழைப்பை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர், இதுகுறித்து நிர்வாகத்திடம் உடனடியாக கூறினார்.
மோப்ப நாய்கள்
உடனே அவர்கள் இதுபற்றி பெல்லந்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் போலீசார், மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். முன்னதாக வெடிகுண்டு மிரட்டலுக்கு பயந்து, நிறுவனத்தில் பணி செய்த ஊழியர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடினர். இதையடுத்து அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள், நிறுவனத்தின் அனைத்து இடங்களிலும் சோதனை செய்தனர். போலீசார் மோப்ப நாய்கள் மூலம் சோதனை செய்தனர்.
அப்போது நிறுவனத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும், அது வெறும் புரளி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் செல்போன் அழைப்பு குறித்து விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் யாரேனும் இந்த செயலில் ஈடுபட்டார்களா? என்று விசாரித்து வருகிறார்கள்.