சிட்டி சிவில் கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
பெங்களூருவில் சிட்டி சிவில் கோர்ட்டுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு:-
பெங்களூருவில் உள்ள சிட்டி சிவில் கோர்ட்டில் வெடிகுண்டு இருப்பதாக கூறி, கடந்த 3-ந் தேதி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு ஒரு மர்மநபர் தெரிவித்தார். இதையடுத்து, சிட்டி சிவில் கோர்ட்டில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள். அப்போது வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது. இதுகுறித்து விதான சவுதா போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை தேடிவந்தனர். இந்த நிலையில், போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் காடுகோடியை சேர்ந்த சுனில்குமார் (வயது 40) என்பவரை பிடித்து விசாரித்தனர். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் ஆகும்.
காடுகோடியில் மனைவியுடன் அவர் வசித்து வசித்தார். அவரது மனைவி உயிர் இழந்த விவகாரத்தில் சுனில்குமார் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக வழக்கு பதிவாகி இருந்தது. இந்த வழக்கு சிட்டி சிவில் கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த 3-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக சுனில் குமாருக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது. கைதான சுனில்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.