இளம்பெண்ணை கொன்று புதைத்த காதலன் கைது


இளம்பெண்ணை கொன்று புதைத்த காதலன் கைது
x
தினத்தந்தி 15 Dec 2022 2:34 AM IST (Updated: 15 Dec 2022 2:34 AM IST)
t-max-icont-min-icon

ஒலேநரசிப்புராவில் இளம்பெண்ணை கொன்று உடலை புதைத்த காதலன் கைது செய்யப்பட்டார். அவரது உடலை தோண்டி எடுத்து விசாரணை நடந்து வருகிறது.

பெங்களூரு:-

காதல் திருமணம்

ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு தாலுகா முட்லா கிராமத்தை சேர்ந்தவர் கல்பனா. இவரது மகள் காவ்யா (வயது 25). இவரும், அக்‌ஷய் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே காவ்யாவுக்கும், அக்‌ஷய்க்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்துவிட்டனர்.

இதையடுத்து காவ்யா, பெங்களூருவுக்கு சென்று அங்கு தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். பெங்களூருவில் வேலை பார்த்து வந்த அவர், சில மாதங்களில் ஹாசனுக்கு திரும்பி வந்து விட்டார்.

திருமணம் செய்யாமல்...

இந்த நிலையில் ஒலேநரசிப்புரா தாலுகா பரசனஹள்ளி கிராமத்தை சேர்ந்த அவினாஷ் என்பவருடன் காவ்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர். அவினாஷ் பெங்களூருவில் வேலை பார்த்து வந்தார். இதனால் காவ்யாவும் அவருடன் பெங்களூருவுக்கு சென்றார். இருவரும் திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக காவ்யா,போன் எதுவும் செய்யாததால் அவரது தாய் கல்பனாவுக்கு சந்தேகம் எழுந்தது. மேலும் காவ்யாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டாலும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. அவினாசிடம் கேட்டாலும் சரியாக பதில் அளிக்கவில்லை என தெரிகிறது.

கொன்று புதைப்பு

இதுகுறித்து கல்பனா ஒலேநரசிப்புரா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், அவினாசை பிடித்து விசாரித்தனர். அப்போது காவ்யாவை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். மேலும் அவரை கொலை செய்து ஒலேநரசிப்புரா அருகே பரசனஹள்ளியில் உள்ள கரும்பு தோட்டத்தில் உடலை புதைத்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவினாசை கைது செய்தனர்.

மேலும் காவ்யாவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை போலீசாரிடம் அவினாஷ் அடையாளம் காட்டினார். இதையடுத்து தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் காவ்யாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் போலீசார், காவ்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து ஒலேநரசிப்புரா போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story