பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்ம ரத உற்சவம் கோலாகலம்
கோலார் தங்கவயலில் உள்ள பிரசன்ன வெங்கடேஷ பெருமாள் கோவில் பிரம்ம ரத உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
கோலார் தங்கவயல்:-
வெங்கட பெருமாள் கோவில்
கோலார் தங்கவயல் ராபர்ட்சன் பேட்டை கீதா சாலையில் உள்ளது லட்சுமி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில். இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டும் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை யொட்டி நேற்று பிரம்மரத உற்சவம் நடைபெற்றது. இந்த பிரம்மரத உற்சவத்தின் போது கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அலங்காரம் செய்தனர். பின்னர் ரதத்தின் மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
இந்த பிரம்மரத உற்சவம் கோவிலில் இருந்து தொடங்கி கீதா சாலை முதலாவது குறுக்கு தெரு வழியாக பிரிட்சர்டு சாலையை சென்றடைந்தது. பின்னர் அங்கிருந்து மீண்டும் கோவிலுக்கு வந்தது. இந்த பிரம்மரத உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமியை தரிசனம் செய்தனர். மேலும் வழி நெடுக்கிலும் பக்தர்களின் தாகம் தீர்க்க பானகம், மோர், பிரசாதம் வழங்கப்பட்டது. இதை பக்தர்கள் வாங்கி பருகி தங்கள் தாகத்தை தீர்த்து கொண்டனர்.
11-ந் தேதி புஷ்ப பல்லக்கு ஊர்வலம்
இந்த பிரம்மரத உற்சவத்தையொட்டி, சாலைகளில் இரு புறங்களிலும் கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் நெரிசலை குறைக்கும் வகையில், அந்த வழியாக செல்லும் வாகனங்களை மாற்று பாதைகளில் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் வருகிற 11-ந் தேதி புஷ்ப பல்லக்கு ஊர்வலமும், 13-ந் தேதி தங்க ரத உற்சவமும் நடைபெற உள்ளது. இந்த புஷ்ப பல்லக்கு ஊர்வலத்தில் பல லட்சம் பூக்கள் பயன்படுத்தப்படுவது இந்த விழாவின் சிறப்பு அம்சமாகும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள் செய்துள்ளனர். இந்த விழாவையொட்டி கோலார் தங்கவயல் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.