கடும் குளிரிலும் ராகுல்காந்தி பாத யாத்திரை...! எப்படி சாத்தியம்? உ.பி. துணை முதல்-மந்திரி கேள்வி
வட மாநிலங்களில் நிலவும் 3-4 டிகிரி குளிரிலும் ராகுல்காந்திக்கு குளிர் அடிக்கவில்லையா என உத்தரபிரதேச துணை முதல்-மந்திரி பிரஜேஷ் பாதக் கேள்வி எழுப்பி உள்ளார்.
லக்னோ,
டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இந்தியாவில் குளிர் காலமாக இருந்தாலும், வாட்டி வதைக்கும் குளிரால் வட இந்திய மக்கள் அவதிப்படுவது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இந்த வருடம் வட இந்தியாவில் வழக்கத்துக்கும் அதிகமான உறைய வைக்கும் கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் நிலவி வருகிறது. சொல்லப்போனால், ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு டெல்லியின் பல இடங்கள் சென்றுள்ளது. குறிப்பாக சஃப்தர்ஜங் (1.9), பாலம் (5.2), லோதி சாலை (2.8), ரிட்ஜ் (2.2), அய நகர் (2.6) ஆகியப் பகுதிகளில் வெப்பநிலை குறைவாக உள்ளது.
இந்தசூழ்நிலையில், ராகுல் காந்தி ஒற்றுமை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கடும் குளிரிலும் டி- ஷார்ட் அணிந்து நடந்து செல்கிறார் என்று பலரால் வியப்பாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் பாஜகவினர் தொடர்ந்து அவரது டி-ஷர்ட் தொடர்பான விவாதத்தை உருவாக்கி வருகின்றனர்.
பாஜகவைச் சேர்ந்த மஞ்சிந்தர் சிங் சிர்ஸா ராகுல் காந்தியை விமர்சித்து டுவீட் செய்துள்ளார். "பூனை வெளியே வந்தது. ராகுலின் டி-ஷர்ட் தர்மலால் ஆனது. இதனால் அவரால் குளிரை தாங்கிக்கொள்ள முடிகிறது. காங்கிரஸ் ஒரு ஏமாற்று வேலையை காட்டுகிறது. ராகுலின் பொய் பிரச்சாரம் இதன் மூலம் அம்பலபட்டுவிட்டது" என்று அவர் டுவீட் செய்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரியா " பக்தர்கள் அனைவரும் ஒரு நம்பிக்கையற்ற பிறவிகள். அவர்கள் ராகுல்காந்தியின் கழுத்து, மார்பகம் மற்றும் சட்டையில் இருக்கும் சுருக்கங்களை புகைப்படம் எடுத்து விமர்சிக்கின்றனர்" என்று அவர் ட்வீட் செய்தார்.
இதனிடையே, டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல்காந்தி பேசும்போது "நான் குளிரை பார்த்து அஞ்சவில்லை" என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், 3 -4 டிகிரி குளிரிலும் ராகுல்காந்திக்கு குளிர் அடிக்கவில்லை, அவருக்கு என்ன மாதிரியான எதிர்ப்பு சக்தி உள்ளது என ஆய்வுகள் நடக்கின்றன. இதை கண்டறிய எங்களது நிபுணர்களிடம் கேட்டுள்ளோம். கடும் குளிரிலும் ராகுல்காந்தி வெறும் டி-ஷர்ட் மட்டுமே அணிந்து பாதயாத்திரை வருவது குறித்து உ.பி. துணை முதல்-மந்திரி பிரஜேஷ் பாதக் கூறியுள்ளார்.