பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து அண்ணன்-தம்பி சாவு


பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து அண்ணன்-தம்பி சாவு
x

பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து அண்ணன்-தம்பி உயிரிழந்தனர்.

ராய்ச்சூர்:

ராய்ச்சூர் மாவட்டம் மான்வி தாலுகா பாகவதா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது சகோதரர் சுரேஷ். ரமேசின் மகன் அஜய் (வயது 8), சுரேசின் மகன் யல்லலிங்கா (6). இவர்கள் 2 பேரும் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை விளையாடுவதற்காக வீட்டில் இருந்து சென்ற அஜயும், யல்லலிங்காவும் திடீரென மாயமானார்கள். இதனால் அவர்களை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை தாங்கள் படித்து வரும் பள்ளியின் அருகே பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழியில் தேங்கி இருந்த கழிவுநீரில் அஜயும், யல்லலிங்காவும் பிணமாக மிதந்தனர். இதுபற்றி அறிந்ததும் மான்வி போலீசார் அங்கு சென்று சகோதரர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் மூடாத காரணத்தால் தான் குழிக்குள் விழுந்து சகோதரர்கள் இறந்து விட்டதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர். சம்பவம் குறித்து மான்வி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story