பரப்பனஅக்ரஹாரா சிறையில் பயங்கரவாதி மீது கொடூர தாக்குதல்


பரப்பனஅக்ரஹாரா சிறையில் பயங்கரவாதி மீது கொடூர தாக்குதல்
x

பெங்களூருவில், பரப்பனஅக்ரஹாரா சிறையில் பயங்கரவாதி மீது கூட்டாளிகள் கொடூர தாக்குதல் நடத்தி உள்ளனர். குண்டுவெடிப்பு சம்பவத்தில் அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததால் இந்த பயங்கரம் நடந்ததாக கூறப்படுகிறது.

பெங்களூரு:-

குண்டுவெடிப்பு சம்பவம்

பெங்களூரு மல்லேசுவரத்தில் பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதுபற்றி பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அதையடுத்து இவ்வழக்கில் அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் இவ்வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதிகளான சையது அலி, கிஷன் புகாரி என்கிற புகாரி, ஜுல்பிகர் அலி, சிகாபுத்தீன் என்கிற காலித், அகமது பாவா அபூபக்கர், பிலால் அகமது என்ற இம்ரான் ஜலால் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

தாக்குதல்

இவர்கள் அனைவரும் தற்போது பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு பெங்களூருவில் உள்ள சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு(2022) டிசம்பர் மாதம் 16-ந் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அன்றைய தினம் கோர்ட்டில் ஆஜரான சையது அலி, நீதிபதியிடம் தனது தவறை ஒப்புக்கொண்டு, ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவரை, சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சக பயங்கரவாதிகளான கிஷன் புகாரி உள்ளிட்ட 5 பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

போலீசில் புகார்

இந்த கொடூர தாக்குதலில் சையது அலி படுகாயம் அடைந்தார். இதைப்பார்த்த சிறை அதிகாரிகள் சையது அலியை மீட்டனர். பின்னர் அவரை சிறை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து தாமதமாக சிறை அதிகாரிகளின் கவனத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.

அதன்பேரில் அவர்கள் இதுபற்றி பரப்பனஅக்ரஹாரா போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் தற்போதுதான் வெளிச்சத்திற்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story