மல்யுத்த போட்டி முடிந்த சில மணி நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்த இளம் வீரர்! மராட்டியத்தில் சோக சம்பவம்!!
22 வயது மல்யுத்த வீரர் ஒருவர் போட்டி முடிந்த சில மணி நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநில மல்யுத்த வீரர் ஒருவர் போட்டி முடிந்த சில மணிநேரங்களில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம் கோலாப்பூர் நகரில் 22 வயது மல்யுத்த வீரர் ஒருவர் நேற்றிரவு மாரடைப்பால் உயிரிழந்தார்.
மாருதி சர்வேஸ் என்ற மல்யுத்த வீரர் கடந்த சில மாதங்களாக 'ராஷ்டிரகுல் குஸ்தி சங்குல்' மல்யுத் அகாடமியில் பயிற்சி பெற்று வந்தார். இவர் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பந்தர்பூரை சேர்ந்தவர்.
தசராவை முன்னிட்டு நேற்று கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள காகல் தாலுகாவில் மல்யுத்தப் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் சர்வேஸ் வெற்றி பெற்றார். அதன்பின் மாலையில் மற்ற மல்யுத்த வீரர்களுடன் சேர்ந்து சர்வேஸ் அகாடமிக்குத் திரும்பினார்.
இந்த நிலையில், இரவில், அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே சக மல்யுத்த வீரர் ஒருவர் சர்வேஸை பைக்கில் அமர வைத்து மருந்தகம் ஒன்றில் மருந்து வாங்க கடைக்கு அழைத்துச் சென்றார். அப்போது பைக்கின் பின்புறம் சவாரி செய்த சர்வேஸ் சரிந்து விழுந்தார். உடனே அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, மாரடைப்பு காரணமாக மாருதி சர்வேஸ் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது என்று அவரது பயிற்சியாளர் வருத்தத்துடன் கூறினார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.