சமூகநீதி அடிப்படையில் மந்திரிசபை அமைப்பு-முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி
முக்கிய வாக்குறுதிகளை விரைவில் அமல்படுத்துவோம் என்றும், சமூகநீதி அடிப்படையில் மந்திரிசபை அமைக்கப்பட்டு உள்ளது என்றும் முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
பெங்களூரு:-
புதிய முகங்கள்
கர்நாடக மந்திரிசபை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 24 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். இந்த பதவி ஏற்பு விழா நிறைவடைந்ததும், விதான சவுதாவில் மந்திரிகளுடன் சித்தராமையா ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-
மந்திரிசபை முழுமையாக அமைக்கப்பட்டுள்ளது. முதல்-மந்திரி உள்பட 34 மந்திரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இலாகா ஒதுக்கீடு இன்று(அதாவது நேற்று) அல்லது நாளை (இன்று) செய்யப்படும். மந்திரிசபையில் அனுபவம் வாய்ந்தவர்களுடன் புதிய முகங்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக வெற்றி பெற்றவர்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படவில்லை.
வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்
காங்கிரஸ் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்ற வேண்டும். மக்கள் புதிய மாற்றத்தை விரும்பியுள்ளனர். அதனால் ஆட்சி நிர்வாகத்திற்கு புதிய வடிவம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மந்திரிசபை அமைக்கப்பட்டுள்ளது. அதாவது சமூகநீதி அடிப்படையில் மந்திரிசபை அமைத்துள்ளோம். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றன.
நாங்கள் முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினோம். தற்போதும் எங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். 5 முக்கிய உத்தரவாத வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து அடுத்த முறை நடைபெறும் மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அவற்றை மிக விரைவில் அமல்படுத்துவோம். குடகு, ஹாவேரி, ஹாசன், சிக்கமகளூரு உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை.
வழிகாட்டுதல்படி மந்திரி பதவி
சில வழிகாட்டுதல்படி மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. குடகு மாவட்டத்தில் முதல் முறையாக 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
ஆனால் அந்த மாவட்டத்திற்கு மந்திரிசபையில் இடம் வழங்க முடியவில்லை. பதவி கிடைக்காதபோது அதிருப்தி ஏற்படுவது இயல்பானது தான். அதிருப்தியிலேயே திருப்தி உள்ளது. புட்டரங்கஷெட்டியிடம் பேசி சமாதானப்படுத்தினேன். அவர் கட்சியின் முடிவை ஏற்றுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.