சாலையோர தடுப்பில் கார் மோதி விபத்து - 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு


சாலையோர தடுப்பில் கார் மோதி விபத்து - 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு
x

ஆந்திராவில் சாலையோர தடுப்பில் கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.

அமராவதி,

ஆந்திர மாநிலம் அன்னமயம் மாவட்டம் பள்ளியை சேர்ந்தவர் கெங்கி ரெட்டி. இவரது உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சி பலமனேரில் நேற்று இரவு நடந்தது.

திருமண வரவேற்பில் கலந்துகொள்வதற்காக நேற்று மாலை கெங்கி ரெட்டி,மதுலதா, தேவான்ஸ் ரெட்டி,புஷிதா ரெட்டி ஆகிய 4 பேரும் காரில் புறப்பட்டு சென்றனர். காரை கெங்கி ரெட்டி ஓட்டினார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் 4 பேரும் காரில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

நேற்று நள்ளிரவு கார் மதனப்பள்ளி- புங்கனூர் சாலையில் வந்து கொண்டு இருந்தது. அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த சாலை தடுப்பில் மோதி பல அடி தூரம் உருண்டு சென்றது. இதில் காரில் இருந்த 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

நள்ளிரவு நேரம் விபத்து நடந்தது யாருக்கும் தெரியவில்லை. சில மணி நேரம் கழித்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கார் விபத்தில் சிக்கி இருப்பது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு 4 பேரும் அருகில் சாலையோர பள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்தனர்.

பின்னர் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக புங்கலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பிய அவர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



Next Story