கடை உரிமையாளர்கள் மீது பதிவான வழக்கு ரத்து
ஜெலட்டின் குச்சிகள் வெடித்து ஒருவர் இறந்த வழக்கில், கடை உரிமையாளர்கள் மீது பதிவான வழக்கை ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
ராமநகர்:-
ஜெலட்டின் குச்சிகள் வெடித்து சாவு
ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா சாத்தனூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒரு கார் திடீரென வெடித்து சிதறியது. இதில் அந்த காருக்குள் இருந்த மகேஷ் என்பவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் காரில் இருந்த ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததில் மகேஷ் உயிரிழந்தது தெரியவந்தது.
இந்த நிலையில் மகேசுக்கு சட்டவிரோதமாக ஜெலட்டின் குச்சிகள் விற்பனை செய்ததாக, கடை உரிமையாளர்களான பிரகாஷ் ராவ், அவரது மகன் சுனில்குமாரை சாத்தனூர் போலீசார் கைது செய்து இருந்தனர். மேலும் அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இதுகுறித்து ராமநகர் மாவட்ட 2-வது கூடுதல் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
உரிமையாளர்கள் பொறுப்பு ஏற்க முடியாது
ஆனால் பிரகாசும், சுனில்குமாரும் தாங்கள் 2 பேரும் சட்டவிரோதமாக ஜெலட்டின் குச்சிகளை விற்கவில்லை என்று கூறியதுடன், தங்கள் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் ராமநகர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருந்தது. இதனால் தங்கள் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் 2 பேரும் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனு மீது பல்வேறு கட்டங்களாக விசாரணை நடந்தது. நேற்றும் நீதிபதி நடராஜன் முன்னிலையில் அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததில் உயிரிழந்த மகேசுக்கு, தனது மனுதாரர்கள் ஜெலட்டின் குச்சிகளை விற்பனை செய்யவில்லை என்றும், உரிமையாளர்களுக்கு தெரியாமல் கடையில் வேலை செய்த ஹரீஷ்குமார் என்பவர் தான் சட்டவிரோதமாக ஜெலட்டின் குச்சிகளை விற்று பணம் சம்பாதித்ததாகவும் கூறி இருந்தார்.
மனுதாரர்களுக்கு தெரியாமல் ஜெலட்டின் குச்சிகள் விற்பனை நடந்து இருப்பதால் அவர்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி நடராஜன், கடை ஊழியர்கள் செய்யும் தவறுக்கு உரிமையாளர்கள் பொறுப்பு ஏற்க கூடாது என்று கூறியதுடன் பிரகாஷ் ராவ், சுனில்குமார் மீது பதிவான வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.