பஞ்சாப்பில் விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்: விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட முதல்-மந்திரி


பஞ்சாப்பில் விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்:  விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட முதல்-மந்திரி
x

குடிபோதையில் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டு உள்ளார் என ஷிரோமணி அகாலி தள தலைவர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.


புதுடெல்லி,


பஞ்சாப் முதல்-மந்திரியாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவந்த் மான் ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில், அவர் மீது ஷிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல் கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார்.

இதன்படி, விமானத்தில் நன்றாக குடித்து விட்டு போதையில் இருந்த பகவந்த், விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டார். லுப்தான்சா விமானத்தில் அதிக போதையில் நடக்க கூட முடியாமல் பகவந்த் இருந்துள்ளார் என சக பயணிகள் கூறிய தகவல் ஊடகங்களில் வெளிவந்துள்ளது.

இதனால், விமானம் 4 மணிநேர காலதாமதமுடன் சென்றது. இதன் தொடர்ச்சியாக ஆம் ஆத்மி தேசிய கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் அதனை பகவந்த் தவற விட்டுள்ளார். இந்த செய்திகள், உலகம் முழுவதும் உள்ள பஞ்சாபி மக்களை அவமதிப்புக்கும், துன்பத்திற்கும் ஆளாக்கியுள்ளது என சிங் கடுமையாக கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இந்த சம்பவத்தில் அமைதி காக்கும் பஞ்சாப் அரசையும் சாடியுள்ள அவர், இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இந்த விவகாரத்தில் அக்கட்சி தலைவர் மற்றும் டெல்லி முதல்-மந்திரியான கெஜ்ரிவால் வந்து தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் சுக்பீர் சிங் கேட்டு கொண்டுள்ளார்.


Next Story